மதுரை:மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் டங்க்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏல அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து அங்கு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், மதுரை மேலூர் பகுதியை தமிழ் பண்பாட்டு மண்டலமாக, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் விவசாய சங்க பிரதிநிதிகளும் வலியுறுத்தி நரசிங்கம்பட்டி பெருமாள் மலையில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் நேற்று பேரணியாக சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நரசிங்கம்பட்டியில் பெருமாள் மலையில் இருந்து நடைபயணமாகவும், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களிலும் பேரணியாக மதுரை தமுக்கத்தில் உள்ள தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட கிளம்ப முயன்றனர். அவர்களை காவல்துறை தடுக்க முயன்றது. ஆனாலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடைபயணமாக வந்தனர்.
மாங்குளம் பிரிவில் போலீசார் தடுத்து நிறுத்த முயன்ற போது அங்கு போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் வாகனங்களில் பேரணியாக தமுக்கம் மைதானத்துக்கு வந்த அவர்கள் மதுரை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட அனுமதி மறுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தமுக்கம் மைதானம் முன்பாக சாலையில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை தூக்கி வீசி காவல்துறையினரோடு வாக்குவாதம் செய்த பொதுமக்கள், மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மதுரை தலைமை தபால் நிலையத்திற்கு செல்ல விவசாய சங்கம் மற்றும் மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பின்பு, போலீசாரின் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மதுரையில் நடந்த டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட 5 ஆயிரம் விவசாயிகள் மற்றும் பெண்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அனுமதி கட்டுப்பாடுகளை மீறி நடைபயண பேரணி மேற்கொண்டதாக, மதுரை தல்லாகுளம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.