டிடிவி தினகரன் பிரச்சாரம் கோயம்புத்தூர்:தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்.19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கோவை மாவட்டம் சூலூரில் பாரதிய ஜனதா கட்சி கோவை வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று (திங்கட்கிழமை) இரவு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்,"நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மோடி ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில்
வாக்களிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து அங்கிருந்த பாஜக வேட்பாளர்கள் "தாமரை" என குரல் எழுப்பவே, சுதாரித்துக் கொண்ட டிடிவி தினகரன், நேற்று முழுவதும் தேனியில் பிரச்சாரத்தில் இருந்ததால் அதே ஞாபகத்தில் பேசி விட்டேன் எனவும், எப்பொழுதும் மிஸ் ஆகாது, நேற்றைய நியாபகத்தில் இருந்து விட்டேன் என தெரிவித்தார்.
மேலும் "கூட்டணிக் கட்சிகள் தானே அதில் ஒன்றும் தவறு இல்லை" என்று சொல்லிச் சமாளித்தார். இதனைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொண்ட டிடிவி தினகரன் தனது உரையை நிறைவு செய்யும் போது கோயமுத்தூர் மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள், அவர்களுக்கு யார் பிரதமராக வரவேண்டும் என்பது தெரியும்.
மோடி பிரதமராக வரவேண்டும் என நினைத்திருக்கிறார்கள். மோடி அவர்களின் நம்பிக்கைக்கு உரிய அண்ணாமலையை வெற்றி செய்வதன் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதைப் போல தீய சக்தியையும் துரோக சக்தியையும் "தாமரையை வீழ்த்த" நீங்கள் துணை புரிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அதன்பின்னர் சுதாரித்து கொண்ட டிடிவி தினகரன், தாமரை வெற்றி பெற்றது என்ற செய்தி தமிழகம் முழுவதும் பறை சாற்ற வேண்டும் என பேசி சமாளித்தார். பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த தினகரன் பாஜகவை வீழ்த்த வேண்டும், அண்ணாமலைக்கு குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என பேசியது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:சுட்டெரிக்கும் வெயில்.. பகல் நேரங்களில் வெளியில் செல்வோருக்கு சுகாதாரத்துறையின் அறிவுரைகள்!