திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்.
கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோயில் முன்புள்ள கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் பௌர்ணமி நாட்களில் கோயில் கடற்கரையில் இரவில் குடும்பத்தோடு தங்கி வழிபாடு செய்வார்கள். இந்த நிலையில் தொடர்ந்து கோயில் கடற்கரையில் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக கடலின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. கடல் சீற்றத்தின் காரணமாக கோயில் முன்புள்ள கடற்கரையில் அதிக அளவில் கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சுமார் 20 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு கடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் கடற்கரையில் கோயில் முன்புள்ள படிக்கட்டு பகுதியில் இருந்து கடலுக்குள் இறங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் படிக்கட்டுகள் பகுதியில் தகரம் மற்றும் தடுப்புவேலிகள் கொண்டு பக்தர்கள் இறங்காதவாறு அடைக்கப்பட்டுள்ளது. கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் பாறைகள் மற்றும் பெரிய அளவிலான கற்கள் வெளியே தெரிகின்றன. இதனால் கடலில் நீராடும் பக்தர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய லிங்கம் மற்றும் சிங்க உடல் கற்சிலை.. வியப்பாக பார்த்த பக்தர்கள்!
எனவே கடல் அரிப்பை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர் .இந்த நிலையில் திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் கடல் அரிப்பை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எம்பி கனிமொழி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சென்னை ஐஐடி ஆய்வுக்குழுவினர் இன்று நேரில் வருகை தந்தனர்.
இவர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை நேரில் பார்வையிட்டு உடன் வந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து என்ன விதமான நடவடிக்கை மேற்கொண்டால் கடல் அரிப்பை தடுக்கலாம் எனவும் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, ஐ ஐ டி குழுவினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு அந்த ஆய்வு அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.