தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்சாரத்துக்கு கூடுதல் வரி விதிப்பதா? - தமிழக அரசுக்கு அன்புமணி, டிடிவி கண்டனம்! - electricity surcharge impose - ELECTRICITY SURCHARGE IMPOSE

Opposition for electricity surcharge: தொழில் நிறுவனங்கள் தனியாரிடமிருந்து வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என அன்புமணி இராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன்
அன்புமணி ராமதாஸ் மற்றும் டிடிவி தினகரன் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 27, 2024, 5:54 PM IST

சென்னை:மின்சார சந்தையில் இருந்து, தொழில் துறையினர் வாங்கும் மின்சாரம் யூனிட்டிற்கு, 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கப்படும் எனும் மின்வாரியத்தின் முடிவிற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் இன்று (மே.27) கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'வெளிச்சந்தையில் தொழிற்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட்டிற்கு 34 காசுகள் கூடுதலாக வசூலிக்கும் மின்வாரியத்தின் முடிவு கடும் கண்டனத்திற்குரியது. மின்கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரை முற்றிலுமாக முடக்கும் நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழகத்தில் உயர் அழுத்த மின்பிரிவில் இடம்பெறும் நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு, யூனிட் ஒன்றுக்கு ஏற்கனவே வசூலிக்கப்படும் 1.96 ரூபாயுடன் கூடுதலாக 34 காசுகள் வசூலிக்க மின்வாரியம் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய தனியார் நிறுவனங்களிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் மின்சார வாரியம், உயர் அழுத்த மின் நுகர்வோர் தங்களின் தேவைக்காக வெளிச்சந்தையில் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிப்பது எந்த வகையில் நியாயம்? என தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கீடு (221), மின்சார நிலைக் கட்டணம் ரத்து (222), உள்ளிட்ட எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முன்வராத திமுக அரசு, தன் தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் மீதான விரோதப் போக்கையே தொடர்ந்து கடைபிடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

திமுக ஆட்சு பொறுப்பேற்றபின் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் கடும் இன்னல்களுக்குள்ளாகி பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூடப்பட்ட நிலையில், லாப நோக்கத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு, தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவு தொழில்துறையை முற்றிலுமாக முடக்கக்கூடிய செயலாகும்.

எனவே, மின்சாரச் சந்தையில் தொழில்துறையினர் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு குளறுபடிகள், ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் நிறைந்திருக்கும் மின்வாரியத்தை மறுசீரமைத்து வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்', என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ், பேராசையில் மின்சாரக் கட்டணத்தையும், வரிகளையும் உயர்த்துவது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு ஒப்பானதாகிவிடும் என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்திய அளவிலான மின்சார சந்தையிலிருந்தும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்தும் தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு கட்டணம் மற்றும் வரியாக ஏற்கனவே வசூலிக்கப்படும் ரூ.1.96 காசுகளுடன் கூடுதல் வரியாக 34 காசுகள் சேர்த்து வசூலிக்க தமிழ்நாடு மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது.

இதையும் படிங்க: சென்னையில் இருந்து 326 பேர் ஹஜ் யாத்திரை.. நேரில் சென்று வழியனுப்பி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்! - Haj Yatra From Chennai

இதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்திருக்கிறது. மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது, எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள், துணி ஆலைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரத் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மட்டுமே தீர்க்க முடியாது. அதனால், தனியாரிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் அவை மின்சாரத்தை வாங்குகின்றன.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வாங்கப்படும் மின்சாரத்தை தங்கள் ஆலைக்கு கொண்டு வருவதற்காக மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின்தடத்தை பயன்படுத்துகின்றன. அதற்கான கட்டணம் மற்றும் வரியாக யூனிட்டுக்கு ரூ.1.94 செலுத்தப்படுகிறது. இதுவே அதிகம் என்று தொழில்துறையினரால் கூறப்படும் நிலையில், இப்போது கூடுதல் வரியை விதிப்பது நியாயமல்ல.

தமிழ்நாட்டில் கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதனால், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டுக்கு ரூ.31,500 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

அதேநேரத்தில் அளவுக்கு அதிகமான மின்சாரக் கட்டண உயர்வால் ஏராளமான சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. யூனிட்டுக்கு 34 காசு கூடுதல் வரி விதிக்கப்பட்டால் மீதமுள்ள பெருந்தொழில் நிறுவனங்களும் மூடப்படும் நிலை ஏற்படும். இதைத் தான் தமிழக அரசு விரும்புகிறதா? என்று தெரியவில்லை.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வால் மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 7 மாதங்களில் ரூ.23,863.29 கோடி கூடுதல் வருவாய் கிடைத்தது. ஆனாலும், மின்சார வாரியத்தின் இழப்பு குறைவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது.

மின்சாரக் கொள்முதல் செலவு அதிகரித்திருப்பது, மின்சார வாரியத்தில் நடைபெறும் ஊழல்கள் ஆகியவை தான் இழப்புக்கான முதன்மைக் காரணம் என்று கூறப்படும் நிலையில், அதை சரி செய்யாமல் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது, தனியாரிடம் வாங்கும் மின்சாரத்திற்கும் கூடுதல் வரி விதிப்பது என தொழில் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தாக்குதல்களை தமிழக அரசு தொடுப்பது கண்டிக்கத்தக்கது.

வருமானத்தைப் பெருக்க வேண்டும் என்ற பேராசையில் மின்சாரக் கட்டணத்தையும், வரிகளையும் உயர்த்துவது பொன்முட்டையிடும் வாத்தை அறுப்பதற்கு ஒப்பானதாகிவிடும். எனவே, தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்' என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: 8 லட்சம் உயிரிழப்புகள் தவிர்ப்பு; பீகார் கிட்ட இருந்து தமிழக அரசு கத்துக்கணும்: ராமதாஸ் - Ramadoss

ABOUT THE AUTHOR

...view details