திருச்சி:தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நவல்பட்டில் ரூ. 59.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.17) திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தின் பெருநகரமான சென்னையில் ஐடி துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களிலும் ஐடி துறை வளர்ந்து வருகிறது. குறிப்பாகக் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்கள் அதிகப்படியான ஐடி நிறுவனங்களை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில், திருச்சி நவல்பட்டு பகுதியில் ஏற்கனவே கட்டப்பட்டுப் பயன்பாட்டில் இருக்கும் எல்காட் (ELCOT) ஐடி பார்க்கில் விடார்ட் டெக்னாலஜிஸ், ஐ லிங்க் சிஸ்டம்ஸ், டிசாஸ்டர் ரெக்கவரி சென்டர், வூரம் டெக்னாலஜிஸ், வி.ஆர்.டெல்லா ஐடி சர்வீஸ், GI TECH GAMING போன்ற பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.