திருச்சி:திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே எம்.ஆர். பாளையம் காப்புக்காட்டு பகுதி உள்ளது. இங்கு கடந்த 2019-ஆம் ஆண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் சுமார் 50 ஏக்கர் நில பரப்பளவில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டது.
இந்த யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமானது, மத்திய விலங்கு காட்சியக ஆணையம், அனுமதியுடன் தமிழ்நாடு அரசு வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் யானைகளை பராமரித்து, வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில், சட்ட விரோதமாக வைத்திருந்த தனியார் யானைகள், மற்றும் உரிய பராமரிப்பு இல்லாத கோயில் யானைகளையும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரிலும், தலைமை வன உயிரின பாதுகாப்பு அலுவலர் உத்தரவின் பேரிலும் 10 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மண்டல தலைமை வன பாதுகாவலர் சதீஷ் மற்றும் திருச்சி மாவட்ட வன அலுவலர் கீர்த்திகா அறிவுரையின்படி, உதவி வன பாதுகாவலர் சரவணகுமார் தலைமையில் உலக யானைகள் தினம் கொண்டாடப்பட்டது.