திருச்சி: தமிழகக் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஒப்புதலோடு, மாவட்டத் தலைவர்கள் பரிந்துரைப்படி, திருச்சியில் உள்ள 65 வார்டுகளுக்கும் தலைவர்கள், மாவட்ட அளவில் துணைத் தலைவர், செயலாளர், பொதுச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 45 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடந்த இந்த நிகழ்வில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பங்கேற்று பதவி நியமனக் கடிதத்தை வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எம்.பி திருநாவுக்கரசர், "திருச்சியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதற்கான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. நான் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் மீண்டும் போட்டியிட விருப்பப் படுகிறேன். இதே போல் மற்றவர்களும் விருப்பப்படலாம்.
கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்குள் பேச்சு வார்த்தை நடத்தி, தொகுதிப் பங்கீடு செய்து கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிக்கப்படும். தற்போது, கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக கட்சிகளுக்குத் தொகுதி எண்ணிக்கை தான் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதி என்று அறிவிக்கவில்லை. அனைத்துக் கட்சிகளும் பேசி முடித்த பின், அந்தந்த கட்சித் தலைவர்கள் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்பார்கள்.