டெல்லி: நாடு முழுவதும் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூன் 24ஆம் தேதி முதன்முறையாக நாடாளுமன்றம் கூடிய நிலையில், ஜூன் 25ஆம் தேதி மக்களவை உறுப்பினராக துரை வைகோ பதவி ஏற்றார்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று (ஜூலை 2) பங்கேற்று துரை வைகோ, தன்னுடைய முதல் பேச்சினை பதிவு செய்தார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், மக்களவையில் அவர் ஆற்றிய உரையை பதிவிட்டுள்ளார்.
அதில், “இந்த நாட்டில் பற்றி எரியும் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும் ஐந்து முக்கியமான பிரச்னைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன். முதலாவதாக, இந்தியாவின் பொறியியல் ஆற்றல் மையமான திருச்சிக்கு புத்துயிர் அளிப்பது தொடர்பாக பேச விரும்புகிறேன்.
பெல் தொழிற்சாலை, OFT, கோல்டன் ராக் ரயில்வே பணிமனை மற்றும் HAPP ஆகிய பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அதிகப்படுத்தவும், இதை நம்பியிருக்கும் சிறு, குறு நிறுவனங்களுக்கு பணி வாய்ப்புகளை அதிகப்படுத்தி திருச்சி நகரத்தின் பொருளாதார வளத்தை உயர்த்தவும் கோரிக்கை வைக்கிறேன். இரண்டாவதாக, இலங்கை கடற்படையின் ஆக்கிரமிப்புகளையும், வன்முறைகளையும் பல ஆண்டுகளாக எதிர்கொண்டு வரும் தமிழக மீனவர்களின் அவல நிலையை கூற விரும்புகிறேன்.
இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை 3,020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கச்சத்தீவை மீட்கவும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும் ஒன்றிய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.