தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"நடிகர் விஜயின் அரசியலால் பாஜகவிற்கு தான் பாதிப்பு" -சொல்கிறார் துரை வைகோ! - Trichy MP Durai Vaiko - TRICHY MP DURAI VAIKO

சமூக நீதி மற்றும் திராவிட பாரம்பரியங்களை சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வருகிறார். அவர் சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் முன்னிறுத்தி அரசியல் செய்தால், அது மதவாக பாஜகவிற்கு தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 1, 2024, 6:19 PM IST

புதுக்கோட்டை: மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "உதயநிதிக்கு வாரிசு அடிப்படையில் துணை முதலமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை. அவருடைய திறமை மற்றும் செயல்பாடு காரணமாகவே அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை மூலமாக காவிரி விவகாரத்தை தீர்க்க முடியாது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையிலேயே இதனை அணுக வேண்டும். தேர்தல் பத்திர விவகாரத்தில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. தேர்தல் பத்திரத்தின் மூலமாக பாஜக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.

அதேபோல, பரந்தூர் விமான நிலையத்தை பொருத்தவரை அங்குள்ள மக்களின் எண்ணங்களை கேட்டு அதன் அடிப்படையிலேயே திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "திருமாவளவனின் மது விலக்கு மாநாட்டிற்கு 100 சதவீதம் எங்களின் ஆதரவை அளிக்கிறோம். பூரண மதுவிலக்கு தான் எங்களின் எண்ணமும். அரசியல் இயக்கங்கள் நினைத்தால், பூரண மதுவிலக்கை கொண்டு வர முடியாது. மக்கள் மனதில் மாற்றம் வர வேண்டும், மக்கள் நினைத்தால் தான் பூரண மதுவிலக்கு சாத்தியம்.

துரை வைகோ செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழகத்தில் கடுமையான நிதி தட்டுப்பாடு மற்றும் நிதி நெருக்கடி உள்ளது. மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை. இதுமட்டும் அல்லாது, மத்திய அரசுப் பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியையும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், தமிழக பள்ளிக் கல்வித்துறையும் கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது.

இதையும் படிங்க:2026 சட்டமன்ற தேர்தல்: உதயநிதி VS விஜய்?- இளைஞர் பட்டாளம் யார் பக்கம்?

தமிழக மக்களுக்காக, நிதிக்கு கையேந்தி தான் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். இதில் வேறு எந்த அரசியல் காரணங்களும் இல்லை. நாங்கள் என்ன சொன்னாலும் முதலமைச்சர் செய்து கொடுக்கிறார்.

மேலும், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை இந்த தருணத்தில் தேவையில்லை என்பதுதான் மதிமுகவின் நிலைப்பாடு. இதனால் கூட்டணிக்குள் குழப்பம்தான் ஏற்படும். பாஜகவை தமிழகத்தில் கொண்டுவரக் கூடாது என்பதற்காகத்தான் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம் அந்த எண்ணம் சிதைந்து விடும்" என்று கூறினார்.

இதனை அடுத்து விஜய் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "சமூக நீதி மற்றும் திராவிட பாரம்பரியங்களை சொல்லித்தான் விஜய் அரசியலுக்கு வருகிறார். முழு நேர அரசியலுக்கு வரும்பொழுதுதான் மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பது தெரியும். அவர் சமூக நீதியையும், மதச்சார்பின்மையையும் முன்னுரித்தி அரசியல் செய்தால் அதன் பாதிப்பு திராவிட கட்சிகளுக்கு ஏற்படாது. மதவாக பாஜகவிற்குத்தான் பாதிப்பு ஏற்படும்" என்று பதிலளித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details