திருச்சி:திருச்சி மணப்பாறை தாலுகாவில் உள்ள கண்ணூத்து கிராமத்தில் 2,000 பேர் வசிக்கின்றனர். சுதந்திரம் அடைந்ததிலிருந்து தொலைத்தொடர்பு சேவை இல்லாமல் இருந்தது. அவசர தேவைக்கு 5 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய நிலையில் இருந்ததால், கண்ணூத்து கிராம மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
பள்ளி படிக்கும் மாணவர்களும் கோவிட் தொற்றின் பொழுது ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இதனால் வயதானவர்கள் அவசர மருத்துவ சேவைக்கு மூன்று கிலோமீட்டருக்கு மேல் நடந்து சென்று சிக்னல் கிடைக்கும் இடத்தில் இருந்து 108 சேவையை அழைத்து வர வேண்டிய நிலை இருந்த்து. அதேபோல், இந்த ஊர் நான்கு புறமும் மலையால் சூழ்ந்துள்ளதால் பல தனியார் நெட்வொர்க் சேவைகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், செல்போன் சேவைக்கான டவர்களை அமைப்பதில் சுணக்கம் காட்டினர்.
இந்நிலையில், இந்த கிராம பகுதிக்கு கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் 4ஜி சேவை கொடுக்கப்பட்டதை அடுத்து கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கூறுகையில், "75 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் மொபைல் சேவை இல்லை. கோவிட் காலத்தில் என்னால் ஆன்லைன் வகுப்புகளில் கூட பங்கேற்க முடியவில்லை.
தற்போது கஷ்டப்பட்டு தேர்ச்சி பெற்று, 11ஆம் வகுப்பு படித்து வருகிறேன். இது நாள்வரை ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் தகவல்களை ஆசிரியரிடம் தொடர்பு கொண்டு கேட்க முடியாது. நான் தற்போது JEE தேர்வுக்கு படித்து வருகிறேன். இந்நிலையில், தற்போது இந்த பிஎஸ்என்எல் 4G செல்போன் சேவை மிக உதவிகரமாக உள்ளது” என்றார்.
மேலும் இதுகுறித்து பேசிய தீபக், “100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில் பணிக்குச் செல்லும் வயதானவர்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்த சென்று தங்களது ரேகைகளை பதிவு செய்யும் நிலை இருந்தது. அப்பொழுது, கரூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இது குறித்து தகவல் கொடுத்தபொழுது, தற்காலிகமாக பிஎஸ்என்எல் வாகனத்தை நிறுத்தி மொபைல் சேவை கொடுத்தனர்.
தற்பொழுது நிரந்தரமாக 4G நெட்வொர்க் சேவையை எங்கள் ஊருக்கு பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கியுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அனைத்து அவசர உதவிகளுக்கும் இனி 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியது இல்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு தேடி தந்துள்ள கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் பிஎஸ்என்எல் பொது மேலாளர் உள்பட அதிகாரிகளுக்கு நன்றி” எனக் கூறினார்.