கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் சுற்றி அசத்திய திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மேயர் திருச்சி: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைச் சென்னையில் கடந்த 19ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் கேலோ இந்தியா போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திருச்சியில் கடந்த 21ஆம் தேதி தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் விளையாட்டுப் போட்டிகள், அண்ணா விளையாட்டு மைதான உள்விளையாட்டு அரங்கில் தொடங்கியது. அந்த மல்லர் கம்பம் போட்டியில் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 16 மாநிலங்களிலிருந்து ஒரு மாநிலத்திற்கு 6 ஆண்கள், 6 பெண்கள் வீதமும் பீகார், அஸ்ஸாம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட 11 மாநிலங்களிலிருந்து மாநிலத்திற்கு 2 ஆண்கள், 2 பெண்கள் வீதமும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
மல்லர் கம்பம் விளையாட்டில் நிலை நிறுத்தப்பட்ட மல்லர் கம்பம், தொங்கவிடப்பட்ட மல்லர் கம்பம், கயிறு மல்லர் கம்பம் ஆகிய மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. 21ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெற்ற போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனி போட்டி, ஆண்களுக்கான போட்டி, மகளிருக்கான போட்டி, ஆண் பெண் கலப்பு போட்டி என நடத்தப்பட்டது.
அனைத்து போட்டிகளிலும் ஒட்டுமொத்தமாக மகாராஷ்டிரா அணி 209.25 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்தது. 207.35 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், 205.30 மதிப்பெண்கள் பெற்று மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முதல் இடங்களைப் பிடித்தவர்களுக்குத் தங்கப்பதக்கமும், இரண்டாம் இடங்களைப் பிடித்தவர்களுக்கு வெள்ளிப் பதக்கமும், மூன்றாம் இடங்களில் பிடித்தவர்களுக்கு வெண்கல பதக்கங்களையும் வழங்கினர்.
தொடர்ந்து மல்லர் கம்பம் விளையாட்டு நிறைவு விழாவையொட்டி 500 பேர் கலந்து கொண்ட சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோரும் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினர்.
இதையும் படிங்க:ஸ்ரீரங்கம் தைத் தேரோட்டம்: விண் அதிர்ந்த பக்தர்களின் ரங்கநாதா.. கோவிந்தா.. முழக்கம்!