திருச்சி: இலங்கைக்கு கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ரூ.110 கோடி மதிப்பிலான போதைப்பொருளை திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் கிராமம் அடுத்த கடற்கரை பகுதியில் உள்ள இறால் பண்ணையில் ஹஷிஸ், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதனை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த உள்ளதாகவும் திருச்சி நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இறால் பண்ணை பூட்டி இருந்த நிலையில், அதிகாரிகள் பூட்டை உடைத்து பண்ணையை ஆய்வு செய்ததில் ஹஷிஸ், கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் அடங்கிய சுமார் 48 பைகளை அதிகாரிகள் கைப்பற்றி, சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து ஆய்வு செய்ததில், சுமார் ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹஷிஷ் மற்றும் ரூ.1.05 கோடி மதிப்பிலான 876 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆஸ்கர் விருதுகள் 2024; விருதுகளைக் குவித்த ஓபன்ஹெய்மர் திரைப்படம்..!