திருச்சி:தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் இரண்டு தினங்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் வெற்றி வாகை சூட போகும் வேட்பாளர் யார் என்று எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்திருக்கிறது.
தமிழக அரசியல் வரலாற்றில் திருச்சி ஒரு திருப்பு முனையாகவே இருந்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் திருச்சியை தலைநகராக்க முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு தொழில், ஆன்மீகம், சுற்றுலா என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நகரம் தான் திருச்சி. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறு பாயும் கரையோரம் விவசாயமும் நன்கு செழித்து குடிநீருக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இதனால் அனைத்து வகையிலும் ஒரு சிறப்பு பெற்ற நகரமாகவே திருச்சி இருந்திருக்கிறது.
இவ்வளவு சிறப்பு பெற்ற திருச்சி நகரத்தில் இதுவரைக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த முறை வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் தொடங்கி தற்போது நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் வரை அனைவருமே வெளியூர்களை சேர்ந்தவர்கள் தான். இம்முறை பாஜக அதிமுக தனித்து போட்டியிடுவதும், வாக்கு வங்கிகள் தனித் தனியாக பிரிந்திருப்பதும் திருச்சி தொகுதி மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
தற்போதைய சூழலில் திமுக கூட்டணியில் மதிமுகவில் முதன்மை செயலாளர் துரை வைகோ, அதிமுக கூட்டணி சார்பில் கருப்பையா, பாஜக கூட்டணியில் அமமுக சார்பில் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்று இருந்த காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருநாவுக்கரசர் மாபெரும் வெற்றி பெற்றார்.
துரை வைகோ வெல்வாரா?:திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தங்களுக்கு கிடைத்த ஒரு தொகுதியை தக்க வைக்க மதிமுக கடுமையாக போராடுகிறது. தற்போதைய சூழலில் ஆரம்பத்தில் இருந்து திருச்சியை சேர்ந்த இரு அமைச்சர்களான கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் சிறப்பாக களப்பணி ஆற்றி வருகின்றனர். இதன் காரணமாக வெற்றியை பெற்று விடலாம் எனச் சொல்கின்றனர்.
அதே நேரத்தில், துரை வைகோவின் உணர்ச்சி மிகுந்த பேச்சுக்கள் கூட்டணிக்குள் சற்றே மன வருத்தத்தை ஏற்படுத்தியதாக கூறினாலும் அதனை எல்லாம் கண்டுகொள்ளாமல் களப்பணியாற்றி வெற்றியை ஈட்ட வேண்டும் என அமைச்சர்கள் கூட்டணி கட்சியினருக்கு உத்தரவிட்டு அதனை நோக்கி பயணிப்பதாக சொல்கின்றனர்.மேலும், துரை வைகோ தொகுதியை சேர்ந்தவரே இல்லை என மற்ற கட்சி வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் வலுவான கருத்தை முன் வைத்து வருகின்றனர். ஆனால் அது வெற்றியை பாதிக்கும் என சொல்வதற்கில்லை.