திருச்சி:திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு பகுதியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இந்த முகாமில் வசிக்கும் 38 வயதான நளினி கிருபாகரன் என்ற பெண் தேர்தல் ஆணைத்திடம் இணைய வழி மூலமாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து, கடந்தாண்டு வாக்காளர் அடையாள அட்டை பெற்ற நிலையில் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க உள்ளார் என்ற தகவல் வெளியானது.
அதாவது, இவரது பெற்றோர்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கையிலிருந்து வந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் முகாமில் 1985ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு, 1986ஆம் ஆண்டு மண்டபம் முகாமில் நளினி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், இந்திய நாட்டில் பிறந்தாலும் இந்திய குடியுரிமை பெற முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்த நிலையில், நளினி சில வருடங்களுக்கு முன்பு, முதன்முறையாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்த போது, சட்டச் சிக்கல் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் வழக்கறிஞர்கள் உதவியுடன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையை அணுகியுள்ளார். அதுதொடர்பான வழக்கு சுமார் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக நடந்துள்ளது. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, அப்பெண்ணிற்கு பாஸ்போர்ட் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து, கடந்த 2022ஆம் ஆண்டு பாஸ்போர்ட் கிடைத்துள்ளது.