சென்னை:பிரபல தொழிலதிபரும், மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழுமத்தின் நிறுவனருமான ராமோஜி ராவ் கடந்த ஜூன் 8 ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். 87 வயதான அவர், இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான ராமோஜி பிலிம் சிட்டியின் உரிமையாளர் ஆவார்.
அது மட்டுமல்லாது, ஈநாடு பத்திரிகை, ஈடிவி, ஈடிவி பாரத் நெட்வொர்க் போன்ற ஒட்டுமொத்த ராமோஜி குழுமத்தின் தலைவராக இருந்தார். மேலும் சினிமா, சிட்பண்ட் உள்ளிட்ட பல்துறைகளில் சாதனை படைத்தவராக ராமோஜி ராவ் விளங்கினார்.
அதேபோல், பத்திரிகை,இலக்கியம்,கல்வி துறைகளில் இவர் ஆற்றிய செயலுக்காக அவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் இயக்குநர்கள் ஷங்கர், ராஜமெளலி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் இரங்கல் தெரிவித்தனர்.
மேலும், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமோஜி ராவ் உடலுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இறுதி அஞ்சலி நிகழ்வு வரை பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அலுவலகத்தில் அஞ்சலி:இந்நிலையில், ராமோஜி ராவ் மறைந்து 13 ஆம் நாளான இன்று, நாடு முழுவதும் உள்ள ஈநாடு, ஈடிவி, ப்ரியா ப்ராடக்ட்ஸ் மற்றும் மார்கதர்சி நிறுவனங்களில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
அந்த வகையில், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள ஈநாடு, ஈ.டிவி பாரத், மார்க்கதரசி அலுவலக ஊழியர்கள் இணைந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள ஈநாடு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ராமோஜியின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் ஊழியர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, நினைவேந்தல் நிகழ்விற்கு பிறகு ராமோஜி குழுமத்தின் ஊழியர்களுக்கு ராமோஜி ராவ் எழுதிய மடல் படித்து காண்பிக்கப்பட்டது, தொடர்ந்து அவரின் வாழ்க்கை வரலாறு படம் திரையிடப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.