பண்ணாரியில் மயங்கி விழுந்த யானை ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணாரி மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுவது வழக்கம். குறிப்பாக தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி சாலையை கடந்து செல்வது அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று (03.03.2024) பண்ணாரி கோயிலிருந்து பவானிசாகர் செல்லும் சாலையில், குட்டியுடன் வந்த தாய் யானை திடீரென மயங்கி விழுந்துள்ளது. மேலும், மயங்கிய நிலையில் கிடந்த தாய் யானை அருகே குட்டி யானை பரிதாபமாக உலாவுவதாக வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதனை அடுத்து அங்கு வந்த சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் சுதாகர், வனச்சரக அலுவலர் கே.ஆர்.பழனிசாமி ஆகியோர் தாய் யானையின் உடல்நிலையை ஆய்வு செய்தனர். அப்போது, யானையில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து, முதற்கட்டமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படிங்க:பாத்திரத்தில் சிக்கிய சிறுத்தை தலை.. 5 மணி நேரத்திற்கு பிறகு மீட்ட மகாராஷ்டிரா வனத்துறை!
அதன் பின்னர், வனக்கால்நடை மருத்துவர் சதாசிவம், பாதிக்கப்பட்ட 40 வயதுள்ள தாய் யானைக்கு அதே இடத்தில் குளுகோஸ் செலுத்தி சிகிச்சை அளித்தார். மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை பெல்டால் கட்டி தூக்கி நிறுத்தி, அதனை நடக்க வைக்க முயற்சி செய்தனர். ஆனால், யானை மிகவும் சோர்வுடன் காணப்பட்ட யானையால் நிற்கக் கூடமுடியாமல் படுத்துவிட்டது.
அதன் பின்னர் அதே இடத்தில் யானைக்கு பசுந்தழைகள் தீவனமாக அளித்து, தொடர்ந்து குளோஸ் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, குட்டி யானை தாய் யானை அருகே வருவதை கட்டுப்படுத்த, அதை தனியாக பிரித்து பெரிய அகழி அமைத்து, குட்டி யானை மேலே ஏறாதபடி பிடித்து வைத்து, குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். அப்போது, குட்டி யானைக்கு பாலுடன் லாக்டோஜின்(குழந்தைகளுக்கு கொடுக்கும் பால் பவுடர்) கொடுத்து அதனை தூங்க வைத்தனர்.
இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநர் சுதாகர் கூறுகையில், "சிகிச்சை பெற்று வரும் தாய் யானையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், ஒருவேளை சிகிச்சை பலனின்றி தாய் யானை இறந்துவிட்டால், குட்டியை மற்ற யானைகளுடன் சேர்க்கும் முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் அல்லது குட்டி யானையை முதுமலை யானைகள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தேனி மேற்குதொடர்ச்சிமலை பகுதியில் காட்டுத் தீ.. சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை!