சென்னை:தமிழ்நாட்டில் இன்று முதல் தபால் மூலமாகவே ஓட்டுநர் உரிமம் அனுப்பப்படும் என போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துத் துறை ஆணையர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்றுகள் இன்று (பிப்.28) முதல் விரைவு அஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக் கூடாது.
மேலும், வாகன மற்றும் மென்பொருளில் தவறான தொடர்பு எண் மற்றும் முகவரியைக் குறிப்பிட்டதன் காரணமாக, தபால் திரும்பப் பெறப்பட்டால், உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி திருத்தம் செய்யப்பட்ட பின்னரே, சம்பந்தப்பட்ட ஆவணத்தை விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். தவறான முகவரிக்கு விண்ணப்பதாரரே பொறுப்பு என தகவல் பலகை மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.
அதேபோல், 4 மணி வரை அச்சு செய்யப்படும் ஆவணங்களை அன்றைய தினமே அனுப்ப வேண்டும். குறிப்பாக, இந்த நடவடிக்கை என்பது இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தபால் மூலமாக ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை தபால் மூலம் அனுப்ப போக்குவரத்துத் துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை சார்பில் ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றுகள் தொடர்பான கட்டுப்பாடுகள்:
- 26.02.2024 முதல் அனைத்து ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்றுகள் விரைவு அஞ்சல் மூலமே அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் விண்ணப்பதாரருக்கு நேரடியாக வழங்கக் கூடாது.
- வாகன மற்றும் சாரதி மென்பொருளின் தவறான அலைபேசி எண் மற்றும் முகவரி தவறாகக் குறிப்பிட்டு தபால் துறையினரால் திரும்பப் பெற்றிருந்தால், அவற்றை மென்பொருளில் சரி செய்வதற்கு உரிய விண்ணப்பம் மற்றும் கட்டணம் செலுத்தி திருத்தம் செய்யப்பட்ட பின்னரே, ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்று ஆகியவற்றை விரைவு அஞ்சலில் அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரர் வெளியூர் சென்று இருந்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காக அவரது ஒட்டுநர் உரிமம் அல்லது பதிவுச்சான்று தபால் துறை மூலம் திரும்பப் பெறப்பட்ட பின்னர் தொடர்புடைய விண்ணப்பதாரர் அலுவலகத்திற்கு வருகை தரும் பட்சத்தில் எக்காரணம் கொண்டும் அவரிடம் நேரடியாக ஒப்படைக்கக் கூடாது. விண்ணப்பதாரர்களிடமிருந்து உரிய மதிப்பில் அஞ்சல் வில்லைகள் ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட தபால் உறையைப் பெற்றுக்கொண்டு அதன் மூலமாகவே அனுப்ப வேண்டும்.
- தவறான முகவரியோ அல்லது அலைப்பேசி எண்ணையோ விண்ணப்பதாரர் மென்பொருளில் பதிவேற்றம் செய்திருந்தால், அதற்கு விண்ணப்பதாரரே முழுப் பொறுப்பு ஏற்க நேரிடும் என்பதை அலுவலகத் தகவல் பலகையில் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு செய்யப்பட வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் 4 மணி வரை அச்சு எடுக்கப்படும், ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் பதிவுச்சான்றிதழ்களை அன்றைய தினமே அனுப்பப்பட வேண்டும். பிறகு அச்சு எடுக்கப்படுபவை மறுதினம் விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பப்பட வேண்டும்.
- இது குறித்த தகவல்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் செய்தித்தாள்கள் மற்றும் அணைத்து ஊடகங்களிலும் 20.02.2024 அன்றே வெளியிடப்பட வேண்டும்.
- ஒவ்வொரு அலுவலகத்திலும் அடுத்த 2 மாதத்திற்குத் தேவையான எண்ணிக்கையில் தபால் உறைகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதற்கேற்ப தேவைப்பட்டியலை பிரதி மாதம் 10ஆம் தேதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களால், அந்தந்த அரசு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு, பிறகு பிரதி மாதம் 20ஆம் தேதிக்குள் தேவைப்பட்டியல் சரக அலுவலர்கள் மூலமாக, போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
- ஒவ்வொரு அலுவலகத்திலும் பெறப்பட்ட தபால் உறைகளின் எண்ணிக்கை, பயன்படுத்தப்பட்டவை மற்றும் இருப்பு குறித்த தனிப் பதிவேடு ஒன்று பராமரிக்கப்பட வேண்டும். 4 கட்டடப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் பகுதி அலுவலகங்களுக்கு Bar Code Series அவ்வப்போது போக்குவரத்து ஆணையர் அலுவலகம் மூலம் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "2024 தேர்தலுக்குப் பிறகு திமுக முற்றிலுமாக ஒழிக்கப்படும்" - பிரதமர் மோடி