தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

களைகட்டிய கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைத் திருவிழா.. திருநங்கைகளின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? - Koovagam Thiruvizha 2024 - KOOVAGAM THIRUVIZHA 2024

Koovagam Koothandavar Temple: கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில் ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டு வழிபாடு செய்தும், நடனமாடியும் மகிழ்ந்தனர்.

ஏராளமான திருநங்கைகள் கலந்துகொண்டு வழிபாடு
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 7:14 PM IST

Updated : Apr 24, 2024, 10:03 PM IST

கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா

கள்ளக்குறிச்சி:திருநங்கைகளின் இஷ்ட தெய்வமான கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், நேற்று (ஏப்.23) நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கூத்தாண்டவரை தங்களுடைய கணவராக நினைத்து பூசாரிகளின் கைகளால் தாலி கட்டிக்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையை அடுத்த கூவாகம் பகுதியில் உள்ளது, கூத்தாண்டவர் கோயில். மகாபாரதப் போரில் அரவான் (கூத்தாண்டவர்) வீரமரணம் அடைந்ததை நினைவு கூறும் வகையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடபெறுவது வழக்கம்.

இந்த திருவிழாவின் போது, திருநங்கைகளுக்கு திருமணமும், மறுநாள் தேரோட்டமும், தாலி அறுத்து அழுகளம் நிகழ்ச்சியும் நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்வாக, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி, சென்னை திருநங்கை நாயக்கர் மற்றும் தொண்டு நிறுவனம் சார்பாக அழகிப்போட்டியும், அதேபோன்று, 23ஆம் தேதி தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் மிஸ் கூவாகம் 2024ஆம் ஆண்டிற்கான அழகிப் போட்டிகளும் நடைபெற்றன.

இந்த இரண்டு அழகி போட்டிகளிலும் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடினர். இதையடுத்து, நேற்று (ஏப்.23) திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் அரவான் சாமியைக் கணவராக நினைத்து, கூத்தாண்டவர் கோயிலுக்கு மணமக்கள் அலங்காரத்தில் வந்து, பூசாரிகளிடம் தாலி கட்டிக்கொண்டனர்.

இதில் திருநங்கைகள் அங்குள்ள பூசாரிகளின் கைகளில் தாலி கட்டிக் கொண்டு, நடனமாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வந்திருந்தனர். முதன்முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த லில்லி மற்றும் ஆர்யா ஆகிய திருநங்கைகளும் இந்த கோயிலுக்கு வந்தனர்.

இதையடுத்து, இன்று (ஏப்.24) காலை அரவான் பலிகளம் புகும் நிகழ்ச்சி நடைபெற்றது. அரவான் தேரில் அழைத்துச் செல்லப்பட்டு பலியிடப்பட்டார், அப்போது திருநங்கைகள் கதறி அழுது, தாலியை அறுத்து, விதவை கோலத்தில் வெள்ளை நிற உடையில் தோன்றும் நிகழ்ச்சியும், சோகத்துடன் ஊர் திரும்பும் நிகழ்ச்சியும், நடைபெற்றது. இவ்விழாவில் அறநிலையத்துறை சார்பாக கழிப்பறை, குடிநீர் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரியா கூறுகையில், “நான் பெங்களூரில் இருந்து வருகிறேன், பி.ஏ.ஆங்கிலம் பயின்று வருகிறேன். நீண்ட நாட்களாக நான் இந்த கோயிலுக்கு வருகிறேன். இம்முறை போதிய விடுதி இல்லாததால், நான்கு நாட்களாக என்னுடைய காரில் தங்கி திருவிழாவில் கலந்து கொண்டேன்.

தமிழ்நாடு அரசின் சார்பாக போதுமான தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஆகியவை இங்கே செய்து தரப்படுவதில்லை. இளைஞர்களின் தொல்லை மிகவும் அதிகமாகவே உள்ளது. எங்களைப் போன்ற திருநங்கைகளுக்கு அரசின் சார்பாக போதுமான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சோபியா கூறுகையில், “நான் பிஎஸ்சி பயோ டெக்னாலஜி படித்த பட்டதாரி. நான் தேர்தலில் வாக்கு செலுத்திவிட்டேன். கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இளைஞர்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. காவல்துறை அதற்குரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இவ்விழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில், 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அடுத்த வேடந்தவாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும், இதில் வேடந்தவாடி, மங்கலம், அவலூர்பேட்டை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு கிடா வெட்டி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

இதையும் படிங்க: திருச்செந்தூரில் கட்டுக்கடங்காத கூட்டம்.. தடுப்பை தள்ளிவிட்டு உள்ளே சென்ற பக்தர்கள்! - Tiruchendur Murugan Temple

Last Updated : Apr 24, 2024, 10:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details