கோயம்புத்தூர்:டிசைன் போட்ட குர்தாவும், கட்டம்போட்ட லுங்கியும், வாரி முடிந்த கொண்டையுமாக கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தனது குழுவினருடன் இஸ்லாமியர் திருமண விழாவில் உற்சாகமாக பிரியாணி தயாரித்துக் கொண்டிருந்தார் திருநங்கை கனிகா.
தனது பரபரப்பான வேலைகளுக்கு இடையே நமது ஈடிவி செய்தி குழுவினரிடம் பேசிய கனிகா, "செல்வி மற்றும் சரோ அம்மாவிடம் சமையல் கற்ற பின்னர், கோவை மட்டுமல்லாமல் கேரளாவிலும் பிரியாணி சமைத்து வருகிறோம். என்னை போன்ற திருநங்கைகளுக்கு செல்வி அம்மா ஆதரவு கரம் நீட்டி சமையல் கற்று கொடுத்து எங்களுக்குள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்" என்றார்.
கோவை திருநங்கை சமையல் கலைஞர்கள் குழு (Credit - ETV Bharat Tamil Nadu) திருநங்கைகள் என்றாலே தவறான கண்ணோட்டத்துடன் சிலர் பார்க்கும் நிலையில், அவர்களும் தங்கள் சொந்தக்காலை நம்பி இருக்கத் தக்கவகையில் தொழிலை உருவாக்கியிருக்கிறார் செல்வி அம்மா என அன்போது அழைக்கப்படும் திருநங்கை செல்வி.
தொடர்ந்து நம்மிடம் பேசிய கனிகா, "கடந்த 15 ஆண்டுகளாக சமையல் செய்து வருகின்றேன். கோவையில் நாங்கள் தயாரிக்கும் ராவுத்தர் பிரியாணி பிரபலமானது. கோவையை காட்டிலும் கேரளாவில் அதிகமாக எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். கடந்த வாரம் எங்கள் குழுவினர் 40 பேர் இணைத்து மிலாடி நபி அன்று பத்தாயிரம் பேருக்கு பிரியாணி சமைத்தோம். வீட்டில் டீ கூட போட தெரியாமல் இருந்தோம். ஆனால் தற்போது, பத்தாயிரம் பேருக்கு சமையல் செய்யும் அளவிற்கு வளர்ந்துள்ளோம்" என கண்களில் மகழ்ச்சி பொங்கக் கூறினார்.
திருநங்கை கனிகாவின் குழுவினர் (Credits - ETV Bharat Tamil Nadu) இதையும் படிங்க:கண்ணப்பர் திடல் மக்களின் 22 ஆண்டுகால கனவை நனவாக்கிய தமிழக அரசு! பயனாளிகள் நெகிழ்ச்சி
சமூகத்தில் அனைவருக்கும் உணவளிக்கும் தொழிலை செய்யும் எங்களை அனைவரும் அம்மா என்று அழைக்கின்றனர் என கூறும் கனிகா, சமையல் தொழில் இருப்பதால்தான் இந்த மதிப்பு எனக்கு கிடைத்துள்ளது என்கிறார். வீட்டிலும், சமூகத்திலும் புறக்கணிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நல்வழி காட்டும் வகையில் தங்கள் குழு இயங்குவதாகவும் கனிகா கூறுகிறார்.
பிரியாணி செய்ய தயாராகும் திருநங்கை கனிகா (Credits - ETV Bharat Tamil Nadu) மேலும், கனிகாவுடன் சமையல் பணியில் ஈடுபட்டுள்ள திருநங்கை வினிதா கூறுகையில், "வேலை இல்லாமல் இருந்த நிலையில் செல்வி அம்மாவின் வழி காட்டுதல் கிடைத்ததால் இரண்டு ஆண்டுகளாக சமையல் பணியில் ஈடுபட்டு வருகிறேன் விரைவில் பிரியாணி மாஸ்டர் ஆனவுடன் அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் பிரியாணி தயாரிக்க போகிறேன்" என நம்பிக்கை தெரிவித்தார்.
பாலினத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் திருநங்கைகளாக மாறுவோர் பெரும்பாலும் பெற்றோர், உற்றார், உறவினர்கள் என எல்லோராலும் ஒதுக்கப்பட்டு மனம் வருந்தி குடும்பத்தை விட்டு பிரிந்து வாழும் சூழல் நிலவி வருகிறது. இதில் ஒரு சிலருக்கு மட்டுமே நல்வழி காட்ட சிலர் அமைவதால் அவர்கள் மற்றவர்களை போல் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்றனர்.
திருநங்கைகள் கைப்பக்குவத்தில் தயாரான பிரியாணி (Credits - ETV Bharat Tamil Nadu) அந்த வகையில் கோவையைச் சேர்ந்த 50 வயதான திருநங்கை செல்வி அம்மா என்பவரின் வழி காட்டுதலில் ஏராளமான திருநங்கைகள் சமையல் கலையில் அசத்தி வருகின்றனர். குறிப்பாக, எல்லோரும் விரும்பி உண்ணக் கூடிய பிரியாணி இவர்களின் தனிச்சிறப்பாக உள்ளது.
இதன் காரணமாக கோவை மட்டுமல்லாது அண்டை மாநிலமான கேரளாவிலும் செல்வி அம்மாவின் பிரியாணிக்கு தனி மவுசு உள்ளது. அதன் வெளிப்பாடாக, தங்களது இல்ல விழாக்களுக்கு செல்வி அம்மாவின் சமையல் ஆர்டரை மாதக்கணக்கில் காத்திருந்து பெறுகின்றனர். இதற்காக செல்வி அம்மாவின் கீழ் பணியாற்றும் 40க்கும் மேற்பட்டோர் கேரளாவிலும், கோவையிலும் சமையல் வேலைகளை செய்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்