வேலூர்: அசாம் மாநிலம், திப்குகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் (22504) விவேக் எக்ஸ்பிரஸ், வாரத்திற்கு மூன்று முறை திப்குகரில் இருந்து கன்னியாகுமரி வரை சென்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை கன்னியாகுமரி மார்க்கத்தில் இருந்து காட்பாடி நோக்கி வரும்பொழுது, முகுந்தராயபுரம் - திருவலம் ரயில் நிலையத்திற்கு இடையே, 106வது கிலோமீட்டர் பகுதியில், திடீரென ரயில் இன்ஜின் கப்ளிங் உடைந்தது.
இதனால், சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் இன்ஜின் சென்றுள்ளது. மேலும், ரயில் இன்ஜினுடன் இணைக்கப்பட்ட பெட்டிகள் தனியாக நின்றுள்ளது. இதனைக் கண்ட ரயில் இன்ஜின் டிரைவர், உடனடியாக காட்பாடி ரயில்வே நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
பின்னர், இன்ஜின் பின்புறம் இருந்த பாதுகாப்பாளருக்கு தகவல் அளித்ததனால், உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். இதனையடுத்து, இன்ஜின் பெட்டிகள் உடனடியாக நின்றது. இதனிடையே, ரயிலில் பயணித்த பயணிகள் ரயில் இன்ஜினைக் காணவில்லை என்பதைக் கண்டு பதற்றம் அடைந்துள்ளனர்.
உடனடியாக, சம்பவ இடத்திற்குச் சென்ற 20க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், பழைய இன்ஜினை மாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், அதனை மாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. பின்னர், சரியாக மற்றொரு இன்ஜின் கொண்டு வந்து, இரண்டு இன்ஜின்களையும் பொருத்தி சரி செய்து, சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது.
மேலும், இது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஈடிவி பாரத்திடம் கூறுகையில், “விவேக் விரைவு ரயில், காட்பாடி ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்து இன்ஜின் துண்டிக்கப்பட்டது. அதனால் அதில் கார்கள் இணைக்கப்படாமல் இயங்கிக் கொண்டிருந்தது. இதைக் கவனித்த இன்ஜின் டிரைவர் உடனடியாக காட்பாடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
எனவே, இந்த வழித்தடத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்டேஷன் மாஸ்டர் எச்சரித்தார். விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி கோச்சில் அமர்ந்திருந்த காவலாளிக்கும், அதே தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே, அவசர கால பிரேக்கை பயன்படுத்தினார். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டன” என்றனர்.