சென்னை: சென்னை புதுப்பேட்டை சியாளி தெருவைச் சேர்ந்தவர் சித்திக் (50). இவர் கடந்த ஏழு வருடமாக எம்எஸ்கே என்ற பெயரில் தயிர் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மே 9ஆம் தேதி இரவு 8.45 மணியளவில், கீழ்பாக்கம் ஈவிஆர் சாலையில் உள்ள கனரா வங்கி ஏடிஎம்மில் பணம் செலுத்துவதற்கு நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தலையில் ஹெல்மெட் அணிந்தவாரறும், கையில் வாக்கி டாக்கி வைத்துக் கொண்டும், வெள்ள சட்டை காக்கி பேண்ட் அணிந்திருந்துள்ளார். மேலும், ஏடிஎம் அறையில் இருந்த சித்திக்கை வெளியே வரும்படி அந்த நபர் கூறியுள்ளார்.
இதனால் சித்திக், தான் கொண்டு வந்த பணத்தை ஏடிஎம்மில் நிரப்பாமல் வெளியே வந்து, என்னவென்று கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர், தான் கீழ்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ் என்றும், நீங்கள் ஏடிஎம்மில் வெகுநேரமாக என்ன செய்கிறீர்கள், உங்களைப் பார்த்தால் சந்தேகமாக உள்ளது, கையில் என்ன இவ்வளவு பணம், அதைக்கொடு எனக் கூறி பணத்தை பிடுங்கி உள்ளார்.
மேலும், வண்டியில் ஏறு, உன் மீது நிறைய வழக்கினை சேர்த்து விடுவேன் என மிரட்டி, இங்கிருந்து ஓடிவிடு எனக் கூறிவிட்டு, அந்த நபர் 34 ஆயிரத்து 500 ரூபாயைக் கொண்டு சென்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சித்திக், இது குறித்து கீழ்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது பணத்தை பறித்துக் கொண்டு சென்ற நபர், கீழ்பாக்கம் லூட்டர்ஸ் கார்டன் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் ராமமூர்த்தி (55) என்பதும், இவர் ஐசிஎப் போக்குவரத்து எஸ்எஸ்ஐ காவலராக பணியாற்றி வருவதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரை கைது செய்த கீழ்பாக்கம் போலீசார், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் உயிரிழப்பு! - Suicide At Tirunelveli Collectorate