சென்னை:இடைக்கால பட்ஜெட்டில் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதி அறிவிக்காததைக் கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பிப்ரவரி 8ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து திமுக நாடாளுமன்ற குழுத் தலைவரும், ஸ்ரீபெரும்பதூர் எம்பியுமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க, ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரண நிதி உதவி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்யாத ஓரவஞ்சனையைக் கண்டித்து, எதிர் வரும் பிப்ரவரி 8 அன்று காலை 10 மணிக்கு திமுக மற்றும் தோழமை எம்.பிக்கள் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலை முன்பு கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தோழமைக் கட்சி எம்.பிக்களும் கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சென்ற பிப்ரவரி 1 அன்று, வரும் நிதியாண்டு 2024-2025க்கான இந்திய ஒன்றிய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார்.
அதில், அன்மையில் 2023 டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டைப் புரட்டிப் போட்ட வரலாறு காணாத புயல் மழை வெள்ள சேதங்களை சரிசெய்யவும், நிவாரண உதவியாகவும் 37,000 கோடி ரூபாய் தந்து உதவிட வேண்டும் என்ற தமிழ்நாடு அரசு கோரிக்கை பற்றி எந்த அறிவிப்பும் இல்லை.
அதேபோல, மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான உரிய நிதி ஒதுக்கீடு குறித்தும் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்புக்கள் இடம் பெறவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடு திரட்டும் நோக்கில் ஸ்பெயின் நாட்டில் பயணம் மேற்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வன்மையாக கண்டித்ததுடன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் காந்தி சிலை எதிரில் கருஞ்சட்டை அணிந்து போராட்டம் நடத்துவர் என்றும் அறிவித்தார். அதன்படி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8.2.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.