கோயம்புத்தூர்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதை கண்டித்தும், அண்மையில் தமிழக மீனவர்கள் சென்ற படகு மீது, இலங்கை கடற்படையினர் ரோந்து படகு மோதியதில் ராமேஸ்வரம் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். கடலில் விழுந்த மீனவர்களில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்திற்கு தமிழக அரசும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தும் இலங்கை அரசை கண்டித்தும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க கோரியும் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியார் தி.க பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் (Credits - ETV Bharat Tamil Nadu) அதில், கோவையில் உள்ள இலங்கையை சார்ந்த நிறுவனமான டாம்ரோவை முற்றுகையிடுவதாக முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இன்று (சனிக்கிழமை) காலை தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட கட்சியினர் இணைந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ள டாம்ரோ நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர்.
இதற்காக காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் அலுவலகத்தில் இருந்து சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, இலங்கை கடற்படை எதிராகவும், அதன் மீது தமிழக அரசு கொலை வழக்கு பதியும் வேண்டியும் கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், சுட்டுக் கொல்வதிலும் ஈடுபட்டுவருகின்றனர். அண்மையில் தமிழக மீனவர்கள் இருவரை கொலை செய்த இலங்கை கடற் படையினர், தமிழக மீனவர்களின் படகுகளையும் சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது தமிழக அரசும், மத்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. குஜராத் மீனவர்கள் தாக்கப்பட்டால் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்கும் மத்திய அரசு தமிழக மீனவர்கள் தாக்கப்படும்போது எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிப்பதில்லை. இது கண்டனத்திற்குரியது, உடனடியாக தமிழக மீனவர் தாக்கப்படும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மத்திய அரசு நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க:தூத்துக்குடி மீனவர்கள் 22 பேருக்கு ஆக.20 வரை நீதிமன்ற காவல்: இலங்கை நீதிமன்ற உத்தரவால் மீனவர்கள் அதிர்ச்சி