தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புனித யாத்திரை புத்துயிர் திட்டத்தில் தமிழ்நாட்டில் 8 கோயில்கள் தேர்வு: சுற்றுலாத்துறை அமைச்சர் தகவல் - TN Assembly Session 2024 - TN ASSEMBLY SESSION 2024

TN Assembly Session: தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டு அதிகரித்திருப்பதாக சுற்றுலாத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கே.ராமச்சந்திரன்
அமைச்சர் கே.ராமச்சந்திரன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 1:39 PM IST

சென்னை: நடப்பாண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கை குறித்த விவாதம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று நடந்த கூட்டத்தொடரில் அமைச்சர் கே.ராமச்சந்திரன் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, சுற்றுலாத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அந்த கொள்கை விளக்கக் குறிப்பில், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வளமான கலாச்சார பாரம்பரிய மற்றும் அழகிய இயற்கைச்சூழல் ஆகியவை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில் கணிசமான பங்களிப்பை வழங்குவதுடன், பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.

இதில், 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 21.85 கோடி பேர் வருகை தந்துள்ளனர், ஆனால், 2023ஆம் ஆண்டு 28.60 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை பொருத்தவரை 2022ஆம் ஆண்டு 4.07 லட்சம் பேர் வருகை தந்த நிலையில், 2023ஆம் ஆண்டு அதிகரித்து 11.75 லட்சம் பேர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதேபோல, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள "புனித யாத்திரை புத்துயிர் மற்றும் ஆன்மீகம் பாரம்பரியத்தை மேம்படுத்துதல்" திட்டத்தில் தமிழ்நாட்டின் 8 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம், நன்கு திட்டமிடப்பட்ட சுற்றுலா உள்கட்டமைப்பை வழங்குவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்திரை தளங்களில் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்த "புனித யாத்திரை புத்துணியூர் மற்றும் ஆன்மீகம் பாரம்பரியத்தை மேம்படுத்துதல்" என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

தேர்வு செய்யப்பட்டுள்ள 8 கோயில்கள்: இத்திட்டத்தில் தமிழ்நாட்டின் நவகிரக கோயில் சுற்று மேம்பாட்டில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள அருள்மிகு குருபகவான் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் உள்ள அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில், திங்களூரில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், திருநாகேஸ்வரத்தில் உள்ள அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், திருவிடைமருதூரில் உள்ள அருள்மிகு சூரியனார் திருக்கோயில்.

மயிலாடுதுறை மாவட்டம் கீழ்பெரும்பள்ளத்தில் உள்ள அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில், திருவெண்காட்டில் உள்ள அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 8 கோயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ரூ.45 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் சுற்றுலா அமைச்சரிடம் நிதி அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரூ.8.10 கோடி மதிப்பில் சுற்றுலா தலங்களில் அடிப்படை வசதி - அமைச்சர் ராமச்சந்திரன் அசத்தல் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details