சென்னை: கடந்த சில நாட்களாக மதிய நேரங்களில் சென்னைவாசிகளை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையின் ஒரு சில பகுதிகளில் விட்டு விட்டு லேசான மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் (திங்கட்கிழமை) சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடும் வெயில் வீசியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும், இரவு 12 மணி வரையிலும் அதிகளவில் புழுக்கம் நிலவியது. பிறகு வானிலை முற்றிலும் தலைகீழாக மாறி கடும் காற்றுடன், இடி மின்னலுடன் கூடிய கனமழை சென்னையின் பல்வேறு பகுதிகளிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் கொட்டித்தீர்த்தது.
அதாவது, சென்னையில் அண்ணா சாலை, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பாரிமுனை, கோயம்பேடு, அண்ணா நகர், முகப்பேர், அமைந்தகரை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளிலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளாக இருக்கக்கூடிய போரூர், பூந்தமல்லி, மதுரவாயில், அம்பத்தூர், தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு நல்ல மழை பெய்தது.