தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

School Leave: தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! - TODAY SCHOOL LEAVE

தொடர் கனமழை காரணமாக, தமிழ்நாட்டில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2024, 8:21 AM IST

சென்னை:தொடர் மழை காரணமாக, தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது, தென் தமிழகம் மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமாக மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கும், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:பத்து மாவட்டங்களுக்கு இன்று மழை எச்சரிக்கை.. அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை நிலவரம்..!

அந்த வகையில், நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. தற்போது நிலவி வரும் வளிமண்டல் சுழற்சி நாளை (நவ.21) தெற்கு அந்தமான் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சியாக உருவாகி, நவ.23 தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் நவம்பர் 25ஆம் தேதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குற்றாலத்தில் குளிக்கத் தடை:தற்போது பெய்து வரும் மழையால பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 3 நாட்களுக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

  • தொடர் மழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திருவாரூர் மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
  • விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக, மிதமான மழை பெய்துள்ளதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து, சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
  • தொடர் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details