சென்னை:யூடியூப் மூலம் பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்கள் திரட்டியும், ஆட் சேர்ப்பு கூட்டங்களை நடத்தி மூளைச்சலவை செய்தும் இஸ்பு உத் தஹிரீர் என்ற அமைப்பிற்கு ஆட்கள் சேர்த்தது தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கடந்த மே மாதம் ராயப்பேட்டையைச் சேர்ந்த தந்தை மகன்கள் 3 பேர் உட்பட மொத்தம் 6 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்ட ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், அவரது தந்தை மன்சூர், சகோதரர் அப்துல் ரகுமான் அவர்களது நண்பர்களான முகமது மாரீஸ், காதர் நவாஸ் ஷெரீப், அகமது அலி உமாரி ஆகிய 6 நபர்களை ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி முதல் முறையாக 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது அதே 6 நபர்களை இரண்டாவது முறையாகத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
ஊறுகாய் பாக்கெட் இல்லாததால் கடைக்காரர் மீது தாக்குதல்:சென்னை கோடம்பாக்கம் காமராஜ் காலனி பகுதியைச் சேர்ந்தவர்கள் அசாருதீன் மற்றும் முகமத் உசேன். இவர்கள் அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த கலையரசன், வினோத் உள்ளிட்டோர் ஒரு ரூபாய் ஊறுகாய் பாக்கெட் கேட்டதாகவும், ஆனால் ஒரு ரூபாய் பாக்கெட் இல்லை எனவும், ஐந்து ரூபாய் ஊறுகாய் பாக்கெட் மட்டுமே இருப்பதாகக் கடையில் இருந்தவர் கூறியுள்ளார்.