தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் வசம் செல்லும் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் ஆட்கள் தேர்வு.. நெல்லை போக்குவரத்து கழக முடிவால் அதிர்ச்சி! - Tirunelveli transport corporation - TIRUNELVELI TRANSPORT CORPORATION

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகம் திருநெல்வேலியை சார்ந்த பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய மனிதவள நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த புள்ளிகள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மண்டல அலுவலகம்
திருநெல்வேலி மண்டல அலுவலகம் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 18, 2024, 1:01 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அதன் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பில் "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் மண்டலங்களில் பேருந்துகளை இயக்குவதற்கு ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டெண்டர்கள் வரவேற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செய்தித்தாளில் வெளிவந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

அதன்படி ஒப்பந்த புள்ளி திருநெல்வேலி - தூத்துக்குடி சாலை வி.எம்.சத்திரம் தமிழக அரசு போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் இதற்கான படிவம் வழங்கப்படும். இந்த ஒப்பந்த படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் 18.7.2024 அதாவது ஜூலை 18-ஆம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த புள்ளிகள் ஜூலை 18-ஆம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்படும் என்றும் இந்த ஒப்பந்தப் புள்ளிகள் திருநெல்வேலி அரசு போக்குவரத்துக் கழக மைய அலுவலகத்தில் வைத்து திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களை தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துநர்களைத் தனியார் வசம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இடையே கடும் பீதியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடுமையான நஷ்டத்தில் இயங்கி வரும் தமிழக அரசு போக்குவரத்து கழகம் 30 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளிக்கு ஓய்வு பெறும் நாளிலேயே பணி பண பலன்கள் எதையும் கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசின் திருநெல்வேலி மண்டலம் அரசு போக்குவரத்து துறை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான தனியார் அமைப்புகளை சார்ந்த நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த புள்ளி கோரி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு பேருந்துகளை இயக்க ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை நியமிக்க வழிவகை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தமிழகத்தில் மீண்டும் மினி பஸ்களை இயக்க தமிழ்நாடு அரசு திட்டம்; ஜூலை 14 வரை பொதுமக்கள் கருத்து கூற ஏற்பாடு!

ABOUT THE AUTHOR

...view details