தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேட்டை உடைத்து தேர்வு மையத்திற்குள் சென்ற குரூப் 2 தேர்வர்கள்.. புதுக்கோட்டையில் பரபரப்பு! - TNPSC Group 2 and 2A Exam - TNPSC GROUP 2 AND 2A EXAM

குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு நடைபெற்ற நிலையில், புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில் தாமதமாக வந்து காத்திருந்த பத்துக்கும் மேற்பட்ட தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாங்களாகவே கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்வர்களால் உடைக்கப்பட்ட கேட்
தேர்வர்களால் உடைக்கப்பட்ட கேட் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2024, 3:07 PM IST

புதுக்கோட்டை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் 2ஏ பணிகளுக்கான தேர்வு இன்று (செப்.14) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள 55 தேர்வு மையங்களில் 15 ஆயிரத்து 388 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

தாமதமாக வந்ததால் அனுமதி மறுக்கப்பட்ட தேர்வர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

தேர்வாளர்கள் தேர்வினை எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரமான இட வசதி, சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், மின் வசதி மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா பேருந்து நிலையத்தில் இருந்தும் தேர்வு மையங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் ஒருவர் வீதம் 55 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். மேற்படி, தேர்வு தொடர்பான பணிகளை முழுமையாக கண்காணிக்கும் பொருட்டு, தாலுகாவிற்கு ஒருவர் வீதம் இரண்டு துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.

மேலும், இன்,று (செப்.14) தேர்வு கண்காணிப்பு பணிக்காக துணை ஆட்சியர் நிலையில் 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் வினாத்தாள் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல 13 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டது. அனைத்து தேர்வு மையங்களில் பாதுகாப்பு பணிக்காக காவலர்கள் நியமனம் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டது.

இதுமட்டுமல்லாது, தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவோர் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்பட மின்னணு சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை 8:30 மணியில் இருந்து 9 மணிக்குள்ளாக தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தேர்வர்களின் ஹால் டிக்கெட்டுகள் சரிபார்க்கப்பட்டு தேர்வு அறைக்கு அனுப்பப்பட்டனர்.

இத்தகையச் சூழலில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் 9 மணிக்கு மேல் தேர்வர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்த வகையில், ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சுமார் 20க்கும் மேற்பட்டோர் தாமதமாக வந்து தேர்வு எழுத அனுமதிக்குமாறு வற்புறுத்தியதாகவும், ஆனால் அதிகாரிகள் தாமதமாக வந்ததால் தேர்வு எழுத அனுமதி மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி தேர்வு மையத்தில், சுமார் 50க்கும் மேற்பட்டோர் தாமதமாக வந்து தேர்வு எழுத உள்ளே அனுமதிக்குமாறு வற்புறுத்தியதாகவும், அதில் 10க்கும் மேற்பட்டோர் பிரதான நுழைவாயில் அருகே உள்ள சிறிய கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் காவல்துறைக்கும், தேர்வர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details