சென்னை: தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த மே 6ஆம் தேதி தொடங்கி ஜூன் 12ஆம் தேதி வரை நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வீரராகவராவ் நேற்று பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டார்.
அதில் பொதுப் பிரிவினருக்கான தரவரிசை பட்டியலில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்த தொசிதா லட்சுமி என்ற மாணவி முதலிடத்தையும், திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த நிலஞ்சனா என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் என்ற மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசையில் பொதுப் பிரிவில் முதலிடம் பிடித்து அசத்திய செங்கல்பட்டு மாணவி தொசிதா லட்சுமி ஈடிவி பாரத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்பேட்டியில் மாணவி கூறியதாவது, "நான் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். ஐந்து பாடப்பிரிவுகளில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிட்ட போது பொதுப் பிரிவில் முதலிடம் பிடித்திருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது எனவும் கூறினார்.