தென்காசி:தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கத்தின் மூலம் 3வது முறையாக நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்களை 231 பயனாளிகளுக்கும், தொழில் உதவி, கல்வி உதவித் தொகைகள் உள்ளிட்ட 30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், "கடந்த 9 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டிற்கு எந்தச் சிறப்புத்திட்டத்தையும் செய்து கொடுக்காத பாஜகவும், அதில் பிரதமராக இருக்கக் கூடிய மோடியும், தமிழகம் வரும் போதெல்லாம், தமிழ்நாடு என்னுடைய சொந்த மாநிலம். தமிழ்நாட்டிற்கு வருகின்ற போதெல்லாம் சொந்த மாநிலத்திற்கு வருவது போல் உள்ள என்று செல்வது. அப்பட்டமான மோசடியாகும், இவை அனைத்தும் தேர்தல் காலத்தில் மக்களை ஏமாற்றச் சொல்லப்பட்ட வார்த்தைகள்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பாட்டால் உடனடியாகப் பல்லாயிரக்கணக்கான கோடி நிதி வழங்கும் மத்திய பாஜக அரசு. தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப் பாதிப்பிற்கு ஒரு பைசா நிதியைக் கூட தரவில்லை. இது பாஜக அரசும் பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்திற்குச் செய்த மிகப்பெரிய துரோகம். தமிழ் மாநிலம் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பாஜவுடன் கூட்டணி வைத்து இருப்பதை எங்கள் மூப்பனார் பார்த்தல் கண்ணீர் விட்டு அழுவார்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:தேர்தல் பத்திரம் மூலம் பல கோடி நன்கொடை பெற்றது பாஜக.. ஆனந்த் சீனிவாசன் குற்றச்சாட்டு!