தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க ஆந்திரா விரைந்த தனிப்படை போலீஸ்! - சென்னை செய்திகள்

Amar Prasad Reddy: பெண் நிர்வாகியை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தேடப்படும் பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர்.

Amar Prasad Reddy
பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 28, 2024, 10:32 AM IST

சென்னை: கோட்டூர்புரம் பாரதி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டாள். இவர் பாஜகவில் மாவட்ட துணைத் தலைவராக உள்ளார். இந்த நிலையில், கடந்த 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது, அவரது விழாவுக்கு ஆட்களை அழைத்து வருவதில் ஆண்டாளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாஜக பெண் நிர்வாகியான நிவேதாவிற்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கடந்த 21ஆம் தேதி நிவேதா, பாஜக நிர்வாகிகளான அமர் பிரசாத் ரெட்டி, ஸ்ரீதர், பெண் நிர்வாகி கஸ்தூரி ஆகியோருடன் ஆண்டாளின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தால் கொலை செய்து விடுவோம் எனவும், பாஜக நிர்வாகி ஸ்ரீதர் மிரட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து ஆண்டாள் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் பாஜக பெண் நிர்வாகி ஆண்டாள் மற்றும் அவரது சகோதரி தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாஜக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, பாஜக சைதாப்பேட்டை கிழக்கு மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதர், பாஜக பெண் நிர்வாகி நிவேதா, கஸ்தூரி ஆகிய நான்கு பேர் மீதும் கோட்டூர்புரம் போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், அத்துமீறி வீடு புகுந்து தாக்குதல், மிரட்டுதல், காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், சைதாப்பேட்டை பாஜக கிழக்கு மண்டல துணைத் தலைவர் ஸ்ரீதரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை பிடிப்பதற்கு இரண்டு தனிப்படைகள் அமைத்து, அவரை வலைவீசித் தேடிவருகின்றனர். இந்நிலையில் அமர் பிரசாத் ரெட்டி, ஆரணி அருகே தலைமறைவாக இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் போலீசார் நேற்று (ஜன.28) அங்கு சென்று அவரின் கார் ஒன்றை மடக்கி விசாரணை செய்தனர்.

அப்போது காரில் ஓட்டுநர் மற்றும் அவரின் உதவியாளர் மட்டும் இருந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அண்ணாமலை நடைபயணத்தில் கலந்து கொண்டு அவர் பாதியிலேயே புறப்பட்டு சென்றதாகவும், ஆரணியில் இருந்து ஆந்திராவுக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அமர் பிரசாத் ரெட்டியைப் பிடிப்பதற்கு ஆந்திரா விரைந்துள்ளனர். மேலும் அமர் பிரசாத் ரெட்டி நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

ABOUT THE AUTHOR

...view details