தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"தமிழகத்துக்கு தர வேண்டிய அனைத்து நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளது" சபாநாயகர் அப்பாவு பகிரங்க குற்றச்சாட்டு! - APPAVU

தமிழகத்துக்கு தர வேண்டிய அனைத்து நிதியையும் மத்திய அரசு நிறுத்தியுள்ளதாக தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு (Photo Credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 24, 2024, 5:52 PM IST

சென்னை:இயற்கை மருத்துவ தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனையுடன் இணைந்து ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மு.அப்பாவு கலந்து கொண்டார்.

இதில் மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதேபோல் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று நேச்சுரோபதி என்பதை குறிக்கும் வண்ணம் N என்ற ஆங்கில சொல்லை உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பு (ETV Bharat Tamil Nadu)

முன்னதாக விழா மேடையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு பேசியதாவது,"முதலமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை கொண்டு வந்தார். நான் கூட அது தேவையா என்று எண்ணி இருப்பேன். ஆனால் அது ஒரு மகத்தான திட்டம். 1 கோடியே 80 லட்சம் பேர் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆண்டுக்கு 11 ஆயிரத்து 500 பேர் பிடிஎஸ், எம்பிபிஎஸ் படிப்பை படிக்கிறார்கள், 10 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு மருத்துவர் அதைத் தாண்டி இருக்கக் கூடாது என்று மத்திய அரசு கொண்டு வந்தது. மக்களுக்கு விரோதமான திட்டங்கள் வந்தால் நாங்கள் எதிர்ப்போம். நீட் தேர்விற்கு நாங்கள் எதிரி இல்லை.

ஆனால் அது எப்படி நடக்கிறது, தேசிய தேர்வு முகமை நடத்துகிறது அது ஒரு தனியார் அமைப்பு. தனியார் அமைப்பிடம் நீட் தேர்வை கொடுத்திருக்கிறார்கள். இந்த ரோட்டரி இடம் கொடுத்திருந்தால் கூட தன்னலம் இல்லாமல் அந்த தேர்வை 100% நேர்மையாக நடத்தி இருப்பார்கள். தமிழ்நாட்டின் கல்விக்கட்டமைப்பை சீரழித்து விடுகிறது நீட் தேர்வு" என்றார்.

இதையும் படிங்க:"எடப்பாடிக்கு உள்ள தகுதி எனக்கு கிடையாது" - உதயநிதி ஸ்டாலின் சூசகம்!

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு கூறுகையில்,"நீட் தேர்வு தேவையில்லை என்பது தான் எல்லோருடைய கருத்து.
அரசு நடத்துவதற்கும் தனியார்த்துறை நடத்துவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. நீட் தமிழகத்திற்கு தேவையில்லை. எல்லோரும் பல லட்சம் கொடுத்து பயிற்சி மையங்களுக்கு செல்கிறார்கள்.

வசதி இல்லாத ஏழைப் மாணவர்களுக்கு இந்த கட்டமைப்பும், த சட்டமும் மாறும் வரை நாங்களும் கூட பயணம் செய்தாக வேண்டும். அதற்காக தான் அரசும் பயிற்சி கொடுக்கிறது. 7.5% ஏழை எளிய மக்கள் அரசு உதவி பெறும் பள்ளி படிக்கக்கூடிய மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

நீட் தேர்வு தேவையில்லை என்பதால் தான் அரசும் பல கோடி கையெழுத்தை வாங்கி மத்திய அரசை திரும்ப பார்க்கச் சொல்லி இருக்கிறோம். சட்டம் இருக்கிற வரை எல்லோரும் பயணித்து தான் ஆக வேண்டும். இந்த சட்டம் கல்விக்கு எதிரானது, சாமானிய மக்களுக்கு எதிரானது ஒட்டுமொத்த தமிழக கல்வி கட்டமைப்பை அளிக்கக் கூடியது என தெரிவித்தார்.

இந்தியாவுக்கான நிதியமைச்சராக நமது மாநிலத்தின் பெண்மணி தான் இருக்கிறார். ஆனால் இத்தனை நாட்களாக தமிழ்நாட்டிற்கு நிதி கொடுக்காமல் நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஒரு மத்திய அரசு மாநில அரசை இதுபோன்று நடத்தலாமா? தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய பணத்தை ஏன் தடுக்கிறீர்கள். வெள்ளத்திற்கு தரவில்லை, புயலுக்கு தரவில்லை, கல்விக்கு கொடுத்து வந்த நிதியும் நிறுத்தப்பட்டு இருக்கிறது என்றால் அந்த அம்மாவை ( நிர்மலா சீதாராமன்) அழைத்து கேளுங்கள் தப்பு இல்லை. நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி தானே நமக்கு பெருமை தானே எனவும் பணத்தை எல்லோரும் சேர்ந்து வாங்கி தாருங்கள்" என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details