சென்னை:தமிழகத்தில் பலர் புது, புது அரசியல் கட்சிகளை உருவாக்கி வருகின்றனர். பொதுவாகவே நடிகர்கள் அரசியல் கட்சிகள் ஆரம்பிப்பது என்பது நமது நாட்டிற்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர் தொடங்கி விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் வரை திரைத்துறையைச் சார்ந்தவர்களின் அரசியல் பயணம் தற்போது வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அந்த வரிசையில் நடிகர் விஜய் இணைந்துள்ளார்.
கல்வி விழா:தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். இதனையடுத்து, கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இவர் கட்சி ஆரம்பித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
2-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா:கடந்த வருடம் எப்படி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினாரோ, அதே போல இந்த வருடமும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வானது இரண்டு கட்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய விஜய் பல்வேறு அரசியல் கருத்துக்களை மாணவர்களிடையே முன் வைத்தார். குறிப்பாக நீட் விலக்கு, நல்ல அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என பேசி இருந்தார். குறிப்பாக, மத்திய அரசை, ஒன்றிய அரசு என குறிப்பிட்டுப் பேசி இருந்தார். இவர் பேசியது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுகவை எதிர்த்து தான் போட்டி:அந்தவகையில், விஜய் பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் ஈடிவி பாரத் செய்திகளிடம் கூறியதாவது, "முதல் கட்ட பரிசு வழங்கும் விழாவில் மாணவர்களிடையே நீட் தேர்வு குறித்து பேசாமல் இருந்ததை பல்வேறு நபர்கள் பல்வேறு விதமான விமர்சனங்களை முன்வைத்தனர், இவர் நீட் தேர்வு குறித்து பேச வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
எனவே தான் அவர் நீட் தேர்வு குறித்து மாணவர்களிடையே பேசினார். ஆனால், நீட் தேர்வு குறித்து அதிகம் பேச வேண்டி உள்ளது, பல்வேறு குளறுபடிகள் குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை. அவர் மணிப்பூர் குறித்து பேசவில்லை, கல்விக்கு என்ன பேச வேண்டுமோ அதை சரியாக பேசியுள்ளார்.
பாஜகவை எதிர்க்கிறார் என்று நடந்த ஒரு சம்பவத்தை வைத்து மட்டும் சொல்ல முடியாது. அதேபோல, திமுகவிற்கு ஆதரவு அளிக்கிறார் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில், அவர் 2026ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவை எதிர்த்துத்தான் தேர்தலில் நிற்கிறார்" என்றார்.