சென்னை:பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வில் கலந்துக் கொள்ள விண்ணப்பம் செய்வதற்கான காலம் நீடிக்கப்பட்டு, மே 25ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் எனவும், தற்பொழுது பணிபுரியும் பள்ளியில் ஒராண்டு பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைபிடிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்புக் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் வேறு இடங்களுக்கு செல்வதற்கு 13ஆம்தேதி முதல் 17ஆம் தேதி வரை கல்வி மேலாண்மை தகவல் முறைமை (EMIS) இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது.
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்களது EMIS - ID மூலம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர். ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் தொடக்கக் கல்வி இயக்ககம் சார்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணையவழியாக சமர்ப்பித்திடல் வேண்டும். பள்ளிக்கல்வி இயக்ககம் சார்ந்து உயர்நிலை, மேல்நிலை பள்ளித்தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து ஒப்புதல் அளித்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு இணைய வழியாக சமர்ப்பித்திடல் வேண்டும்.
ஆசிரியர்களால் ஒவ்வொரு நாளும் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிலுவையின்றி உடனடியாக கல்வி அலுவலர் சரிபார்க்கப்பட்டு ஏற்பளிக்கப்பட வேண்டும். அலுவலர்களால் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பங்கள், ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முழுமையான வடிவில் பிரதி எடுத்துக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.