சென்னை: காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில், தமிழக பிரதிநிதிகள் நேரடியாக பங்கேற்காமல், ஆன்லைன் மூலம் பங்கேற்பதாகக் கூறி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது X சமூக வளைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக் கூட்டத்தில் நேரடியாக பங்கேற்கவிருந்த தமிழக பிரதிநிதிகளுக்கு டெல்லி செல்ல தடை விதித்து, ஆன்லைன் வாயிலாக மட்டுமே பங்கேற்க வேண்டும் என தமிழக நீர்வளத்துறை உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்துரைகளை வழங்கும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்கூட்டத்தின் முக்கியத்துவத்தை முழுமையாக உணராத திமுக அரசு, அக்கூட்டத்திற்கு தமிழக பிரதிநிதிகளை நேரடியாக அனுப்பி மாநிலத்தின் உரிமையை கோராமல், ஆன்லைன் மூலமாக பங்கேற்க வைத்து வேடிக்கை பார்க்க வைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.