சென்னை: சென்னையில் பிப்ரவரி 8ஆம் தேதி 13 தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரிய வந்த நிலையில், அந்த இ-மெயில் ஐடி குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் சென்னை போலீசார் தீவிரம் காட்டினர். அதாவது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், கோயில்களுக்கும் இதேபோன்ற இ-மெயில் மிரட்டல் தொடர்ந்து வந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரின் இ-மெயில் ஐடி புரோட்டான் எனப்படும் நிறுவனத்தின் இ-மெயில் ஐடி மூலமாக ஒரே நபர்தான் விடுத்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர்.
குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டின் புரோட்டான் நிறுவன இ-மெயில் மூலம் விபிஎன்யை (VPN) பயன்படுத்தி இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. விபிஎன் பயன்படுத்தப்பட்டதால், வெடிகுண்டு விவகாரத்தில் குற்றவாளியைப் பிடிப்பது போலீசாருக்கு சற்று சவாலாக இருந்து வருகிறது.
அதையடுத்து, இன்டெர்போல் (INTERPOL) மூலமாக மிரட்டல் வந்த இ-மெயில் ஐடியின் ஐபி முகவரி (Email ID IP Address), மிரட்டல் விடுத்த நபரின் விவரங்கள் கேட்டுச் சம்பந்தப்பட்ட சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த புரோட்டான் நிறுவனத்திற்குக் கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த கடிதத்திற்கு எந்த பதிலும் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வரவில்லை எனக் கூறப்பட்டது.