தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பீகார் மாநில பட்ஜெட் போல் உள்ளது" - மத்திய பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து! - UNION BUDGET 2025

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் பீகார் மாநில பட்ஜெட் போல் உள்ளது என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி  பழனிசாமி, நிர்மலா சீதாராமன்
எடப்பாடி பழனிசாமி, நிர்மலா சீதாராமன் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 1, 2025, 4:01 PM IST

சென்னை:மத்திய அரசின் 2025-26 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டை வரவேற்றும், விமர்சித்தும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்திய பட்ஜெட் குறித்த கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், '2024-25 பொருளாதார ஆண்டறிக்கையில், குறிப்பிட்ட பொருளாதார வளர்ச்சியை எட்ட, முதலீட்டு மூலதனத்தை ஊக்கப்படுத்தவும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டிய அவசியம் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழைகள்,பெண்கள்,விவசாயிகள்,இளைஞர்கள் ஆகியோரைா மையமாக கொண்டு 2025-26 நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிதி நிலை அறிக்கையில் வருமான வரி விலக்கு கணிசமாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்க அம்சமாகும். உள்நாட்டு உற்பத்தியை ஊக்கப்படுத்த அடிப்படை சுங்க வரிகளில் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

பீகார் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் வருவதை கருத்தில் கொண்டு அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளதால், மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை என கூறுவதை விட, பீகார் மாநில வரவு - செலவு நிதிநிலை அறிக்கை என கருதும்படி அமைந்துள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலத்திற்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் இல்லை.

விவசாயத் துறையை பொருத்தவரை 100 மாவட்டங்களுக்கு சிறப்பு திட்டங்கள் உள்பட சில திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.இந்த திட்டங்களில் விவசாயிகளுக்கு உற்பத்தியை பெருக்கவும், இடுபொருள் விலையை கட்டுப்படுத்தவும், விளைப்பொருட்களை நியாயமான விலையில் விற்பனை செய்யவும், அதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்கவும் தமிழ்நாட்டிற்கு இத்திட்டங்கள் எவ்வாறு உதவும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு மாநிலம் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். விவசாய வளத்தை பெருக்கவும், விரையமாகும் நீரை பயன்படுத்த உதவும் நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.

அதேபோல் சிறு, குறு தொழில்களுக்கும்,ஏற்றுமதிக்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும், திறன் மேம்பாட்டு பயிற்சியுடன் புதிய வேகத்தை கொடுக்கவும் திட்டங்கள் ஏதும் இல்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரயில்வே திட்டங்கள் மற்றும் கோவை, மதுரை ஆகிய நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு எவ்வித அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இல்லாதது தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கிறது.

10 ஆண்டுகளுக்கு மேல் 8 சதவீதத்திற்கு குறையாத பொருளாதார வளர்ச்சியை அடைந்தால்தான் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடைய முடியும் என பொருளாதார அறிக்கை கூறுகிறது. இந்நிதி நிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரம்பை மட்டும் உயர்த்தியுள்ளதால் , இது ஒரு மாயாஜல அறிக்கையாக, வார்த்தை ஜாலங்கள் நிறைந்த அறிக்கையாக தோன்றுகிறது.பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 8% எப்படி உயர்த்தப்படும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.' என்று எடப்பாடி பழனிசாமி மத்திய பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details