மதுரை:மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் நாயக்கர்பட்டியை மையமாக கொண்டு மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனத்திற்கு இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்படும் என தகவல் வெளியான நிலையில், மேலூர் பகுதியில் பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 7ஆம் தேதி மேலூர் மற்றும் நரசிங்கம்பட்டி ஆகிய பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சல் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக திரண்டு வந்தனர். இதனால் மதுரை மாநகரே ஸ்தம்பித்தது. தொடர்ந்து டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டங்கள் பல்வேறு வகையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட டங்ஸ்டன் கனிம சுரங்க ஏல அறிவிப்பை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட பண்பாட்டு தொல்லியல் மண்டலமாகவும், பெரியாறு பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்திக்க எதிர்ப்புக் குழுவினருக்கு தமிழக பாஜகவினர் ஏற்பாடு செய்து தந்துள்ளனர். மேலூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மகாமுனி அம்பலம், ஆனந்த், போஸ், முருகேசன், முத்துவீரனன், சாமிக்கண்ணு, ஆனந்த் ஆகியோர் மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை நாளை சந்திக்கவுள்ளனர். இதற்காக அவர்கள் மதுரையில் இருந்து விமானத்தில் டெல்லி சென்றனர்.
மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி உடனான சந்திப்பின் போது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் மகா சுசீந்திரன், பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன், ராஜசிம்மன், பாலமுருகன் ஆகியோரும் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக விவசாயிகள் குழுவினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மேலூர் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்ட ஏல அறிவிப்புக்கு பின்னர் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். போராடும் மக்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நாங்கள் நாளை மத்திய அமைச்சரை சந்திக்க இருக்கிறோம். எங்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு நிச்சயம் மதிப்பளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றனர்.