தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் - செல்லூர் ராஜூ - SELLUR RAJU

பெரியாரை இழிவாகப் பேசும் சீமானை கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். திராவிடர் கழகம் அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2025, 4:30 PM IST

மதுரை: இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜூ தலைமையில் அதிமுகவினர் இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது:

'பெரியாரை இழிவாக பேசிய சீமானை தமிழக அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகம் முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும். ஆனால் இவர்களெல்லாம் பெரியார் நினைவிடத்திற்கு சென்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். இப்போது தான் இதுவெல்லாம் நாடகம் எனத் தெரிகிறது.

தமிழுக்காக அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தியுள்ளனர், கோவையில் கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்தினார். அதில் தமிழ் அறிஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவில்லை.

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என எடப்பாடி பழனிசாமி போராடினார். டங்ஸ்டன் திட்டம் வரக்கூடாது என கடந்த 10 மாதங்களாக முதலமைச்சர் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏன் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை? சட்டமன்றத்தில் 2 மணி நேரமாக டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக பேசிய எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் பதிலளிக்கவில்லை. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக மக்களும் அதிமுகவும் போராடிய பின்னர் தான் முதலமைச்சர் விழித்துக் கொண்டு எதிர்க்கிறோம் என கூறினார்.

இனிவரும் ஒரு ஆண்டு முழுவதும் திமுகவின் நாடகம் தொடர்ந்து கொண்டே இருக்கும். மக்களை ஏமாற்றுவதற்காக திமுக பல்வேறு வேஷங்களை போடும். 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர் ஊராக சென்று மாய, மந்திர பெட்டிகளை வைத்துக் கொண்டு வெற்றி பெற்றார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அடித்து சொல்கிறேன் 2026ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வராது, முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்ன நாடகம் நடத்தினாலும் மக்களிடம் எடுபடாது.

தமிழ்நாட்டு மக்கள் மிக விழிப்போடு உள்ளனர். திமுகவை நம்பி செல்லும் கூட்டணி கட்சிகள் மக்கள் எதிர்ப்பை பெற்று ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது. திமுகவை நேற்று வரை ஆதரித்த மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேங்கை வயல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என பேசுகின்றன. வேங்கைவயல் விவகாரத்தில் திமுகவினரே ஈடுபட்டு இருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. அதனை மூடி மறைக்கவே ஊரைச் சேர்ந்தவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது'

இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details