ராணிப்பேட்டை: தமிழகம் முழுவதும் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவின் ஆய்வு, கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினரும் அக்குழுவின் தலைவருமான அன்பழகன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மற்றும் முடிவு பெற்ற பணிகள் குறித்து மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
முன்னதாக, மேல்விஷாரம் பகுதியில் மத்திய அரசின் ஜன விகாஸ் காரியக்ரம் (Jan Vikas Karyakram) திட்டத்தின் மூலம் 2 கோடி 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையினை ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து, ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பள்ளி மாணவர்களுடன் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி கழிவறைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், வருகின்ற சட்டமன்ற கூட்டுத் தொடரில் பள்ளிகளில் கழிவறை அமைப்பது குறித்தும், தூய்மை பணியாளர்கள் நியமிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நெமிலி, சோளிங்கர், புதுப்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு ஆய்வுக் குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையில் நேற்று (ஜன. 30) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளி துறை, தாட்கோ துறை, சுகாதாரத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் கீழ் 42 பயனாளிகளுக்கு ரூ.62.66 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவின் தலைவர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், "முதலமைச்சரின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், கைத்தறித்துறை அமைச்சர் காந்தி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு பணிகள் முடிவடைந்துள்ளன.
ஆய்வு மேற்கொண்ட பணிகள் நிறைவாக இருந்தது, சில இடங்களில் தொய்வாக நடைபெற்று வந்த பணிகளை விரைவு படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல குறைகள் கண்டறியப்பட்டன. அவற்றை சரி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
மேலும், வெள்ளத்தால் சேதம் அடைந்த பாலாறு அணைக்கட்டு சரி செய்வது, கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் புனரமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக மொத்தம் 270 கோடி ரூபாய் மதிப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அது குறித்து முதலமைச்சர் மற்றும் துறை சார்ந்த அமைச்சர்களிடம் பரிந்துரை செய்யப்பட்டு, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:அயோத்தி ராமர் கோயில் பெருமைக்குரியது..! பட்ஜெட் கூட்டத்தில் குடியரசு தலைவர் பேச்சு!