சென்னை:தமிழகசட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று (ஜன. 28) தமிழக அரசு குறித்து விமர்சித்து வெளியிட்ட செய்திக்குப் பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-க்கு 'மீடியா மேனியா' நோய் தாக்கியுள்ளதைப் போலத் தெரிகிறது.
தினந்தோறும் தன்னைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வரவேண்டும் எனச் செயல்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள கேரளா ஆளுநர் ஆரீப் முகமது கான், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகிய மூவருக்கும் தங்களுக்குள் யாருடைய பெயர் அதிகமாக மீடியாக்களில் வருகிறது என்ற மறைமுகப் போட்டியே இருப்பது போலத் தெரிகிறது.
மாநில அரசின் மீது விமர்சனம் செய்து அதன் மூலம் ஊடக வெளிச்சம் பெறவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மூவரும் தாங்கள் ஆளுநர் என்பதையே மறந்து, பாஜக கட்சியால் அனுப்பப்பட்ட அந்தந்த மாநில செய்தித் தொடர்பாளர்களைப் போல நடந்து கொள்கிறார்கள்.
நேற்றைய தினம் நாகப்பட்டினம் சென்ற ஆளுநர், அதன்பிறகு ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். நாகை மாவட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தைப் பற்றி விமர்சித்துள்ளார். வீடுகள் சரியில்லை என்றும் இதற்குக் காரணம் தமிழ்நாடு அரசின் நிர்வாக அக்கறையின்மை, ஊழல் என்றும் வாய்க்கு வந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறார்.
அரசுத் திட்டத்தில் ஏதாவது விளக்கம் தேவைப்பட்டால் அதுகுறித்துக் கேட்டறியலாம். அதை விட்டு விட்டு எதிர்க்கட்சியைப் போல மீடியாக்களில் விமர்சனம் செய்யக் கிளம்புவதுதான் ஒரு ஆளுநருக்கு அழகா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் ஊழல் என்று கூறுகின்றார்? வாய்க்கு வந்ததைப் பேசிடவும் எழுதிடவும் அவர் அட்ரஸ் இல்லாத ஆள் அல்லவே?