சென்னை:மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூலை 28) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்குட்பட்ட மாஞ்சோலை BBTC தேயிலை நிறுவனத்தின் செயல்பாடுகள் முடிவுற்றதால், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் அனைத்து உதவிகளையும் செய்து தர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான அனைத்து உதவிகளும் பணியிழந்த தொழிலாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடுகள், வாழ்வாதாரத்திற்கான உதவிகள் உள்ளிட்டவற்றை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், செப்டம்பர் மாதத்திற்குள் ஓய்வு பெறவுள்ள 23 தொழிலாளர்களைத் தவிர்த்து, 536 தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு அவர்களின் முழு சட்டப்பூர்வ பணப் பலன்கள் மற்றும் நிறுவனத்தால் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கருணைத் தொகையில் 25 சதவீதம் ஆகியவற்றை பெற்றுக் கொண்டனர் என நிறுவனத்தின் சார்பில் தொழிலாளர் நலத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டது.
389 குடும்பங்களைச் சார்ந்த 418 தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதில், 266 நபர்கள் திருநெல்வேலி மாவட்டத்திலும், 76 நபர்கள் தென்காசி மாவட்டத்திலும், 49 நபர்கள் தூத்துக்குடி மாவட்டத்திலும், 18 நபர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும், 9 நபர்கள் பிற மாநிலங்களிலும் குடியேற விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
அவர்களின் விண்ணப்பங்களைப் பெற்று அதற்கான அனைத்து உதவிகளையும் செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களுக்கு பின்வரும் உதவிகளை வழங்கிட உத்தரவு வழங்கப்பட்டு, அதனடிப்படையில் நீதிமன்றத்திலும் அவை மாவட்ட ஆட்சியரால் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1) கிராமப் பகுதிகளில் குடியேற விரும்பும் வீடற்ற தொழிலாளர்களுக்கு தற்போதைய அரசு விதிமுறைகளைத் தளர்வு செய்து சிறப்பினமாகக் கருதி, அவர்களின் விருப்பத்தின் பேரில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடு கட்டித் தரப்படும்.
2) திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்டு தயார் நிலையிலுள்ள அம்பாசமுத்திரம் வட்டம், பாப்பாங்குளம் கிராமத்தில் 240 அடுக்கு மாடி வீடுகள் மற்றும் திருநெல்வேலி மாநகரம், ரெட்டியார்பட்டி பகுதியில் பணி முடிவடையும் நிலையிலுள்ள அடுக்குமாடி வீடுகள் ஆகியவற்றை முன்னுரிமை அடிப்படையில் விருப்பமுள்ள, ஏற்கனவே வீடு இல்லாத மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி ஒதுக்கீடு செய்யப்படும்.
3) தொழிலாளர்களில் 55 வயதிற்குட்பட்ட பட்டியல் இனத்தைச் சார்ந்த வாழ்வாதார வசதி தேவைப்படும் தொழிலாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் (AABCS ) புதிய தொழில் தொடங்க 35 சதவீதம் மானியம் மற்றும் 6 சதவீதம் வட்டிச் சலுகையுடன் சுயதொழில் தொடங்க கடன் வழங்கப்படும்.