தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பச்சமலையில் சட்டவிரோத செம்மண் கடத்தல்? - தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம்! - TN Govt

Chennai Pachamalai: சென்னை தாம்பரத்தில் உள்ள பச்சமலையை அழித்து சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்படுவது தொடர்பாக நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 7:18 AM IST

சென்னை: சென்னை தாம்பரத்தை ஒட்டிய கடப்பேரி கிராமத்தில் உள்ள பச்சமலையில் சிவன் கோயில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் புராதன பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்த பகுதியில், சட்டவிரோதமாக ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி செம்மண் எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாகவும், மரங்கள் வெட்டப்படுவதாகவும் கூறி, குரோம்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், பச்சமலையில் இருந்து செம்மண் கடத்தப்படுவது குறித்து தொல்லியல் துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் புகார் மனு அனுப்பியதாகவும், அதன்படி அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர், விசாரணை நடத்திய போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பச்சமலை பகுதியை அழித்து செம்மண் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும்படி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தல் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், தமிழ்நாடு அரசுத் தரப்பில், தொல்லியல் துறையின் கடிதத்தைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், சம்பவ இடத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், குறிப்பிட்ட பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவை அகற்றப்பட்டு, நான்கு வாரங்களில் பழைய நிலைக்கு மீட்கப்படும் என விளக்கமளிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:"உச்ச நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்" - ராகுல் காந்தி வழக்கில் வழக்கறிஞருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

ABOUT THE AUTHOR

...view details