தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சர்வதேச நிகழ்வுகளில் மதுபானம் விநியோகம் விவகாரம்: தமிழக அரசு கூறும் விதிகள் என்ன?

Madras high court: சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு போட்டிகளில் மதுபானங்கள் விநியோகிக்க கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 12, 2024, 8:53 PM IST

சென்னை:சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு போட்டிகளில் மதுபானங்கள் விநியோகிக்க கடுமையான நிபந்தனைகளுடன் சிறப்பு உரிமம் வழங்கப்படும் எனவும், நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் முன்வைப்புத் தொகையும் முடக்கப்படும் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

விளையாட்டு போட்டிகளில் மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்கும் அரசாணையை எதிர்த்து வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை சார்பில் அதன் தலைவர் வழக்கறிஞர் பாலு தாக்கல் செய்த வழக்கில், தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள், சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளின் போது மதுபானம் விநியோகிக்க வேண்டியது அவசியம் என கோரிக்கை விடுத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை பரிசீலித்து சர்வதேச மற்றும் தேசிய கருத்தரங்குகளில் மதுபானம் விநியோகிப்பதற்கு சிறப்பு உரிமம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக கூடுதல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு உரிமத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், சர்வதேச கருத்தரங்கு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பொதுமக்கள் பார்வைக்கு அப்பால் தனி இடத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட வேண்டும், சிறப்பு உரிமம் கோரி 7 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும், எவ்வளவு மதுபானம் வழங்குவது என டாஸ்மாக் நிர்வாகம் தான் தீர்மானிக்கும் என்பன உள்ளிட்ட பல்வேறு கடும் நிபந்தனைகள் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

நிபந்தனைகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க சிறப்பு படைகள் அமைக்கப்படும் எனவும், நிபந்தனைகளை மீறினால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் முன்வைப்புத் தொகையும் முடக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் பதில் மனுவுக்கு பதில் அளிக்கும்படி மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரியதை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, விசாரணையை மார்ச் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:"ஆளுநருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை"- பாஜக மாநில துணைத்தலைவர்!

ABOUT THE AUTHOR

...view details