சென்னை: கோயம்பேட்டில் பேருந்து நிலையம் செயல்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் நகருக்கு வெளியே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுச் செயல்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க போதிய வசதி இல்லை எனவும் பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டிலிருந்து பேருந்துகளை இயக்க அனுமதி தர வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், இது தொடர்பாகப் போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிக்கையில், “தெற்கு நோக்கிச் செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய மூன்று இடங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கடந்த 13.02.2024 அன்று வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்தும், கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதன்மூலம் கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13.02.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதிப் படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, சென்னையில் இருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களைத் தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது என அறிவிக்கப்படுகிறது. சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மேற்கண்ட 3 இடங்களைத் தவிர தெற்கு நோக்கிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களைத் தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையிலும், சென்னையில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் எக்காரணம் கொண்டும் மேற்கூறிய 3 இடங்களைத் தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், தனியார் செயலிகளிலும் பொதுமக்களைக் குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது. அவ்வாறு பதிவு செய்தால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
இதனை, மீறிச் செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கட்டட அனுமதி எளிமையாக்கப்படும்.. சுய சான்றிதழ் மூலம் இனி கட்டட அனுமதி பெறலாம் - அமைச்சர் தங்கம் தென்னரசு..