தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விசாரணைக் கைதிகள் வழக்கறிஞர்களுடன் இண்டர்காமில் பேசும் முறையை திரும்பப் பெற்றது தமிழக அரசு! - Madras High Court - MADRAS HIGH COURT

புழல் சிறையில் விசாரணைக் கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம் (Credits: ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 2:21 PM IST

சென்னை:சிறைக் கைதிகளைச் சந்திக்க வழக்கறிஞர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, இன்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சிறையில் உள்ள கைதிகளுடன் இண்டர்காமில் மட்டுமே பேச வேண்டும் எனக் கூறுவதன் மூலம், அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படுகிறதோ? என்ற அச்சம் கைதிகள் மத்தியில் உள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், இண்டர்காம் உரையாடல்கள் எதுவும் பதிவு செய்யப்படுவதில்லை எனவும், தற்போது கைதிகள் இண்டர்காம் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசும் நடைமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும், மீண்டும் பழைய நடைமுறையே கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு: சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் ஆணை!

தொடர்ந்து மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.காசிராஜன், ஒரு நேரத்தில் ஒரே ஒரு கைதியை மட்டுமே அனுமதிப்பதாகவும், அதனை அதிகரிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இதற்கு பதிலளித்த கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், ஒரே நேரத்தில் ஐந்து கைதிகளைச் சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், கைதிகளைச் சந்திக்க வரும் பெண் வழக்கறிஞர்களுக்கு கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து, தற்போது செய்யப்பட்டுள்ள கழிப்பிட வசதியை முறையாக பராமரிக்க வேண்டுமெனத் தெரிவித்த நீதிபதிகள், வட மாநிலங்களை விட தமிழகத்தில் சிறை வசதிகள் சிறப்பாக உள்ளது. மேலும், சிறை அதிகாரிகளை மரியாதையுடன் நடத்த வேண்டுமென வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details