தமிழக அரசுக்கு ஆசிரியர் கழகத்தினர் வலியுறுத்தல் சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 8 ஆயிரம் காலி பணியிடங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலாளர் சுரேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 69 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இருந்தன. ஆனால் தற்போது 170 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்தியதால், படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்ந்துள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கல்லூரிகளில் பேராசிரியர்கள் போதுமான அளவில் இல்லை.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் 4000 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் நியமிக்கப்படுவதாக கடந்த தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால் அதை கொடுத்து 14 மாதங்கள் கடந்துள்ளது. பணியிடங்களை நிரப்புவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும். மாணவர்களின் கல்வித் தரம் பாதிப்புகள் குறித்து சுமார் 2 லட்சம் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று உயர்கல்வித்துறை அமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
விரைவில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களையும் உருவாக்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்புகள் வருவதற்கு முன்னரே அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட 16,000 ஆசிரியர் பணியிடங்களில் 8 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
அவற்றில் ஏற்கனவே அறிவித்த 4 ஆயிரம் உதவி பேராசிரியர்களை முதலில் நியமிக்க வேண்டும். தேர்தல் பணியின் போது கல்லூரி ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க:சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சடலமாக மீட்பு!