சென்னை: கடந்த பிப்ரவரி மாதம், 2024-2025ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “கடந்த காலங்களில் டிசம்பர் மாதம் பெய்த அதிக மழையின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்திற்கான வானிலை முன்னெச்சரிக்காக வானிலை தொடர்பான முடிவுகளை துல்லியமாக தெரிந்து கொள்ள, விரைவான வானிலை முன்னறிவிப்புகளைப் பெற இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
இதன்படி, 1,400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களை நிறுவ ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. வெள்ளம், நில அதிர்வு உள்ளிட்டவற்றைக் கண்காணித்து பேரிடர் அபாய அளவைக் குறைக்க தொழில்நுட்ப மையம் அமைக்கப்படும்” உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.