சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் செப்டம்பர் 1970-ல் நிறுவப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள குடிசைக் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு வீட்டுவசதி, குடிசை மேம்பாடு, மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. வாரியம் ஆரம்பத்தில் அதன் செயல்பாடுகளை சென்னையில் தொடங்கியது. தொடர்ந்து, அதன் செயல்பாடுகள் படிப்படியாக 1984 முதல் தமிழகத்தின் பிற நகர்ப்புறங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கீழ் நலத்திட்டத்தை பெறும் பயனாளிகள் ஆதார் எண்ணை வைத்திருக்கவேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்துக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், “பயனாளிகள் நலத் திட்டங்களுக்காக விண்ணப்பிக்கும் முன்னதாக ஆதார் எண்ணைப் பெற வேண்டும். இதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது திட்டத்தை செயல்படுத்தும் துறைகள் மூலமாக பயனாளி ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகளைச் செய்து கொடுக்கலாம் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆதார் எண்ணைப் பெறும் வரை விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம், தாசில்தார் அல்லது சான்றொப்பமிடும் தகுதியான அதிகாரிகள் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய கடிதம், ஏதேனும் துறையில் இருந்து வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:"அரசு மதுவில் கிக் இல்லை..விட்டில் பூச்சியைப் போல கிக்குக்காக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழக்கிறார்கள்!"